ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்: கருணாநிதி அறிக்கை
அ.தி.மு.க.விற்கு தக்க பாடம் கற்பிக்கும் வகையில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 13-ந் தேதி ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல். அமைச்சர்கள் எல்லாம் ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டிருக்கின்ற காரணத்தால் தலைமைச் செயலகத்தில் எந்த பணிகளும் நடைபெறாமல் முடங்கிக்கிடக்கின்றன என்று ஏடுகளிலே செய்திகள் வந்துள்ளன. அண்ணா நினைவு நாளையொட்டி, அண்ணா நினைவிடத்திற்கு முதல்-அமைச்சரைத்தவிர வேறு எந்த அமைச்சர்களும் வரவில்லை. அந்த நாளில் ஆண்டு தோறும் கோவில்களில் நடைபெறும் சமபந்தி போஜனமும் இந்த ஆண்டு நடைபெறவில்லை.
உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு, போலி வாக்காளர்களை நீக்கி, திருத்தப்பட்ட கூடுதல் வாக்காளர் பட்டியலை தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறது.
ஜனநாயக முறைக்கு எதிராக இந்த ஆட்சியினர் தொடர்ந்து நடத்தி வரும் அராஜகங்களுக்கு ஓர் எச்சரிக்கை, அறிவுறுத்தல் செய்யப்பட வேண்டாமா? அதற்காகத்தான் இந்த இடைத்தேர்தல்.
இந்த தேர்தலிலும் அவர்களையே வெற்றி பெறச்செய்து விட்டால், தங்களை எதிர்க்க யாருமே இல்லை என்ற அகம்பாவத்தோடும், ஆணவத்தோடும் மேலும் மேலும் மக்கள் விரோத-ஜனநாயக விரோதச் செயல்களில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டு ஆட்டம் போட நேரிடும்.
புதிதாக பொறுப்பேற்ற முதல்-அமைச்சர் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. அவர் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று 125 நாட்கள் ஆன போதும், இன்னமும் முதல்-அமைச்சர் அறைக்கு செல்லவே முடியவில்லை. ஏற்கனவே இருந்த நிதித்துறை அமைச்சர் அறையிலே தான் தங்கியிருக்கிறார்.
அண்ணா நினைவு நாள் அஞ்சலி செலுத்தக்கூட, ஒரு அமைச்சர்கூட உடன் வராமல், தனியாக முதல்-அமைச்சர் மட்டும் செல்வது புகைப்படமாக வெளிவந்துள்ளது. முதல்வரே இல்லாத மாநிலமாகத்தான் தமிழகம் காட்சியளிக்கிறது. இவற்றுக்கெல்லாம் ஜனநாயக ரீதியாக பாடம் கற்பிக்க வேண்டாமா? அதற்கொரு நல்வாய்ப்பாக அமைந்திருப்பது தான் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்.
எனவே வரும் 13-ந் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.க.விற்கு தக்க பாடம் கற்பிக்க, அவர்களும் திருந்தி மிச்ச நாட்களிலாவது மக்களைப் பற்றி அக்கறையோடு நடந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பினை வழங்கிட, தி.மு.க. வேட்பாளர் ஆனந்துக்கு வாக்களித்து வெற்றியினைத் தேடித்தர வேண்டுமென்று ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காள பெருமக்களையெல்லாம் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply