தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் நாட்டில் இனியொருபோதும் ஏற்படாது : சந்திரிகா
தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சத்துடன் வாழக்கூடிய சூழல் நாட்டில் இனியொருபோதும் ஏற்படாது. சிறுபான்மை மக்களை பாதுகாத்து பெற்றுக்கொண்ட வெற்றியினை தக்க வைத்துக்கொள்வோம் என தெரிவிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சட்டரீதியாக பெற்றுக்கொண்ட ஜனநாயகத்தை உண்மையானதாக்கிக் கொள்ள மேலும் முயற்சிகள் தேவையெனவும் குறிப்பிட்டார்.
தேசிய சூறா சபையினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்;
கடந்த காலங்களில் சிங்கள தமிழ் முஸ்லிம் சூழல் ஒன்று உருவாகியமையும் ஆயுதப் போராட்டமொன்று முப்பது வருட காலம் தொடரவும் அரசியல் ரீதியில் விடப்பட்ட சில தவறுகளே காரணமானது. எனினும் ஆயுதப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து சுயமானதொரு சூழல் நாட்டில் உருவாக்கப்பட்ட பின்னர் நாடு ஓரளவு அமைதியடைந்தது. ஆனாலும் கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் ஒரு சிலரின் செயற்பாடுகள் சிறுபான்மை மக்களின் நிம்மதியினை சீரழிக்கும் வகையில் அமைந்து விட்டது. பெற்றுக்கொண்ட சமாதானமும் அமைதியும் நிரந்தரமானதாக அமையவில்லை.
கடந்த காலங்களில் மிகப்பெரிய வரலாற்றுத் தவறுகள் விடப்பட்டன. தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்று ஏற்படவில்லை. அவ்வாறானதொரு நிலையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் கட்டவிழ்க்கப்பட்ட அடாவடி சம்பவங்கள் இடம்பெற்றன.
எனினும் இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நாட்டில் மக்கள் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தி விட்டனர். இம்முறை தேர்தலில் நூறு வீதமான வாக்குகளை தமிழ், முஸ்லிம் மக்கள் எமக்கு கொடுத்துள்ளனர். எனவே, புதிய யுகமொன்று ஆரம்பித்துள்ளது. புதிய அரசாங்கம் புதுவித ஆட்சி முறைமை இதில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் எவ்வித அச்சமும் இன்றி வாழ்வதற்கு நாம் பொறுப்பு. அத்துடன் மக்கள் அனைவரும் இன முரண்பாடுகள் இன்றி ஒற்றுமையாக செயல்பட நாம் பொறுப்புடன் செயற்படுவோம்.
அதேபோல் சட்ட ரீதியாக நாம் தற்போது ஒரு ஜனநாயகத்தினை உருவாக்கியுள்ளோம். இதை யதார்த்த பூர்வமாக மக்கள் உணர்ச்சி பூர்வமாக அனுபவிக்கக் கூடிய வகையில் அமைத்துக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply