தலாய் லாமா-ஒபாமா முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் கூட்டாகப் பங்கேற்பு

அமெரிக்க அதிபர் ஒபாமாவும், திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவும் முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் கூட்டாகப் பங்கேற்றனர். திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வாஷிங்டனில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றார். இந்தக் கருத்தரங்கில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3,000 தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கருத்தரங்குக்கு வந்த தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்றார். இருவரும் பரஸ்பரம் வணக்கம் கூறி, புன்னகைத்துக் கொண்டனர். பின்னர், ஒபாமா பேசியதாவது:

சிறந்த நண்பரான தலாய் லாமாவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்க விரும்புகிறேன். அன்பை போதிப்பதில் ஓர் உதாரணமாகவும், அனைத்து மனிதர்களின் சுதந்திரம், கண்ணியம் ஆகியவை குறித்துப் பேச நமக்கு ஓர் உந்துசக்தியாகவும் அவர் திகழ்கிறார்.

வெள்ளை மாளிகைக்கு வருமாறு அவரை அழைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது இந்த நிகழ்ச்சியில் லாமா பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதுவே நானும் அவரும் கூட்டாகப் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சியாகும் என்றார் ஒபாமா.

சீனா எச்சரிக்கை: முன்னதாக, தலாய் லாமாவுடன் ஒபாமா பொது நிகழ்ச்சியில் பங்கேற்பது, அமெரிக்காவுடனான தங்களது உறவைப் பாதிக்கும் என்று சீனா எச்சரித்திருந்தது. இரு தரப்பு உறவுகளை மனத்தில்கொண்டு, சில விவகாரங்களை அமெரிக்கா உரிய முறையில் கையாள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது.

சீன ஆட்சியில் இருந்து திபெத்துக்கு சுதந்திரம் அளிக்கக் கோரி தலாய் லாலா போராடி வருவதால், அவரைப் பிரிவினைவாதி என்று சீனா குற்றம்சாட்டி வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply