பாகிஸ்தான் மீது மோடி போர் தொடுக்க வாய்ப்பு: அமெரிக்க முன்னாள் தூதர்

இந்தியாவில் இனிமேல் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தால், அந்நாட்டுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி போர் தொடுக்க வாய்ப்பிருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் ராபர்ட் பிளாக்வில் கூறினார். இதுதொடர்பாக வாஷிங்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற வெளியுறவு விவகாரங்களுக்கான குழு (சிஎஃப்ஆர்) நிகழ்ச்சியின்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தில்லியில் உள்ள இந்திய நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு 15 ஆண்டுகள் ஆகப் போகிறது. அந்தச் சம்பவத்தை தொடர்ந்து, இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறும் வேளையில், பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து ஒவ்வொரு பிரதமரும் யோசனை நடத்தினர். ஆனால், பிறகு அந்த யோசனையைக் கைவிட்டு விட்டனர்.

ஆனால், இந்தியாவில் தற்போது ஆட்சியாளர்கள் மாறியுள்ளனர். தற்போது பிரதமராக இருப்பவர், ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்பது எனது கருத்து.

இந்தியாவில் மிகப்பெரிய அளவில் ஏதேனும் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று, அந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆகியவற்றுக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்தால், இந்தியப் பிரதமராக தற்போதிருப்பவர் (நரேந்திர மோடி), பாகிஸ்தானுக்கு எதிராக நிச்சயம் ராணுவ நடவடிக்கை எடுப்பார்.

நரேந்திர மோடிக்கு முன்பு, இந்தியப் பிரதமர்களாக இருந்தவர்களிடமும், பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து ராணுவம் பல்வேறு திட்டங்களை முன்வைத்தது. ஆனால், அவர்கள் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதேசமயம், முந்தைய பிரதமர்களுடன் ஒப்பிடுகையில், பிரதமர் நரேந்திர மோடி, தனிப்பட்ட முறையிலும், இந்திய மக்களின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் வகையிலும், பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

போர் கூடாது: அணு ஆயுத சக்திகளாக விளங்கும் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூளாமல் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

அதுபோல், பாகிஸ்தானும் தனது முந்தைய கால செயல்பாடுகளைத் தொடர்ந்தால், இந்தியப் பிரதமர் சகித்துக் கொள்ள மாட்டார் என்பதைப் புரிந்து கொள்ளும் என நம்புகிறேன் என்றார் அவர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply