மதிப்புக்குரிய திருவாளர்கள் சம்பந்தன் அவர்களுக்கு : கதிர்பாலசுந்தரம்

நான் ஓர் நாவல்-சிறுகதை எழுத்தாளன், அமிர்தலிங்கம் அவர்கள் பற்றிய ’அமிர்தலிங்கம் சகாப்தம்”, ”சத்தியங்களின் சாடசியம்” மற்றும் வன்னியசிங்கம் அவர்கள் பற்றிய ”சாணக்கியன்” நூல்களின் ஆசிரியர், தமிழ் அரசுக்கட்சி யாழ்ப்பாணத்தில் கைலாய பிள்ளையார் கோவில் வீதியில் முதலாவது கூட்டத்தை வைக்க முடியாமல் ஓடிய கூட்டத்தில் ஓடியவன், இன்னும் பல கூறலாம்.

தமிழ் அரசுக் கட்சியில் இன்றுள்ள தலைமைகளில் தங்கள் பங்களிப்பை பெரிதும் மதிப்பவன். கடவுள் கிருபையால் தமிழ் அரசுக்கட்சிக்கு உங்கள் சேவை கிட்டியுள்ளது என்று நம்புகிறேன். உங்கள் சேவை கிட்டாதிருந்தால் கட்சியை உலகம் திரும்பிப் பார்த்திராது. உங்களோடு சுமந்திரன், விக்கினேஸ்வரன் அவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம். எனினும் நீங்கள் கூட்டமைப்பின் சில்லறைகளின் கூச்சலுக்கு அடிபணிகிறீர்களோ என்ற அச்சம் எனக்குண்டு.

தமிழ் அரசுக் கட்சி எதிர்ப்பு அரசியலைக் கடைப்பிடித்து வந்த வரலாறு சரியோ என்ற கேள்வி இப்பொழுது என்னுள் எழுகின்றது. தொண்டமான் சார்பு அரசியலை மேற்கொண்டு லைன் வாழ்க்கையை மாற்ற முடியவில்லை என்ற எண்ணம் என்னுள் நீண்ட காலம் குடிகொண்டிருந்தது. இன்று அமைதியாக திரும்பிப் பார்க்கின்ற பொழுதில் சிங்கள உளவியலுக்கு ஏற்ற கொள்கையை கடைப்பிடித்து அவர் வெற்றி பெற்றுள்ளார் என்று கூறலாம். வாக்குரிமை முழுவதுமாகப் பறிக்கப்பட்ட ஒரு சமூகம் இன்று வடமாகாண வாக்காளர் எண்ணிக்கையை, உயர்வை-சிறப்பை எட்டிக்கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால் மாதச் சம்பள அரச-தனியார் உத்தியோக ரீதியில் அவர்கள் படுவேகமாக முன்னேறுகிறார்கள். எட்டடி அகலநீள லைன்களில் வாழ்பவர்களே பல்கலைக்கழக கலைப் பீடங்களில் குவிகிறார்கள்.

விஞ்ஞான உயர் கல்வி கற்க அவர்கள் பாடசாலைகளில் வாய்ப்பில்லாத குறை இருந்தது. புதிய அமைச்சர் சபையில் ராதாகிருஸ்ணன் கல்வி அமைச்சர். விஞ்ஞானக் கல்விக் குறையும் ஓடிமறையப்போவது தூரத்தில் இல்லை. புதிய அரசு அவர்களுக்கு 7 பேர்ச் நிலம் கொடுத்து தனிவீடுகள் கட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்களித்தது. அதற்குரிய அமைச்சை திகம்பரம் பெற்றுள்ளார். தொண்டமானால் பெற முடியாது போன தனிவீடுகூடச் சாத்தியமாகப்போகின்றது.

சிங்கள உளவியலைப் பொறுத்தவரை அவர்கள் 1956இல் மூர்க்கமாக எதிர்த்த தமிழ் உரிமையை படிமுறையில் பணிவோடு படிப்படியாக வழங்கியுள்ளார்கள். இன்று வடகிழக்கில் மட்டுமல்ல எனைய பகுதிகளிலும் தமிழ் ஆழ வேரூன்றிக் கொண்டிருக்கிறது. இதுவொன்றே நாம் சிங்களவர்களுடன் எப்படியான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை எமக்கு அறிவுறுத்துகின்றது. இதுவரை தோற்றுப் போன பாதையில் ஓடித் தோற்றுப் போவதைவிட, புதிய பாதையில் முயற்சிப்பதே விவேகமான செயல். அதனைப் புரிந்துகொள்ள முடியாதவர்களைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. தமிழ் மக்கள் விவேகிகள். அவர்கள் புரிந்து கொள்வர்.

ஏனையவர்களை விடுவோம் — பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் சுதந்திரதின விழாவில் சம்பந்தன், சுமந்திரன் அவர்கள் கலந்து கொண்டதை, தமிழ் அரசுக் கட்சியில் இல்லாத பொல்லாத வரலாற்றுத் தவறாகச் சித்தரிக்கிறார். அமிர்தலிங்கம் அவர்களே பிற்காலத்தில் சிங்கள உளவியலை உணர்ந்து படிமுறையில் முன்னேற மாவட்ட சபையை வரவேற்றார். சிங்களவர்களிடம் ஒரே தடவையில் ஒட்டு மொத்தமாகப் பெறமுடியாது. சில்லறையாகத்தான் சேகரிக்க வேண்டும். அந்த அடிப்படையிலேயே தந்தை செல்வாகூட பண்டாரநாயக்கவோடு ஒப்பந்தம் செய்தார். டட்லி அரசில் கட்சிக்கு அமைச்சர் பதவி ஏற்றார். திருச்செல்வம் அமைச்சரானார். யாழ்ப்பாணத்தில் வாதரவத்தை உட்பட சில கிராமங்களுக்கு நன்னீர் வசதி ஏற்படுத்தினார். தமிழ் அரசுக் கட்சி வரலாற்றில் இன்னும் பல ஆதாரங்கள் உண்டு. அதனைப் புரிதுகொள்ள முடியாதவர்கள் கூச்சலை உதவாக் குப்பையாக ஒதுக்கிவிடுங்கள்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி சிரிசேன-பிரதமர் விக்கிரமசிங்கா வழங்கும் அரிய வாய்ப்பை வீணடிக்காமல், நீங்கள் அரசோடு சார்புநிலைப் போக்கைக் கடைப்பிடிப்பதையும், சுதந்திரதின விழாவில் கலந்து கொண்டதையும் சாணக்கியமிக்க இராசதந்திரம் என்று ஏற்றுக்கொள்வதோடு அதற்காக உங்களை மெச்சி வரவேற்று வாழ்த்துகிறேன்.

கதிர் பாலசுந்தரம்

மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply