இந்த வருடம் தேர்தல் இல்லை; விருப்பு வாக்குகளுக்காக ஆபத்துக்குள் மாட்டிக்கொள்ள வேண்டாம் : ஜனாதிபதி
இந்த வருடம் முற்கூட்டிய தேர்தலொன்று நடத்தப்படாது எனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனிப்பட்ட வாக்குகளுக்காகத் தேவையற்ற பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு ஆபத்துக்குள் மாட்டிக்கொள்ள வேண்டாம் என அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். முற்கூட்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என அமைச்சர்களிடம் ஜனாதிபதி வெண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் அக்குரஸ்ஸவில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தபால் மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சர் மஹிந்த விஜயசேகர காயமடைந்ததைத் தொடர்ந்தே ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அக்குரசவில் நடந்த விழாவில் பாதுகாப்புச் சரியான முறையில் பலப்படுத்தப்பட்டிருக்கவில்லையென அந்த விழாவில் கலந்துகொண்டிருந்த மற்றுமொரு அமைச்சர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவினரை அமைச்சர்கள் தமது கடமைகளுக்கு மாத்திரமன்றி தமது சொந்தத் தேவைகளுக்கும், கடைகளுக்கும் அழைத்துச் செல்வதாக ஜனாதிபதி விமர்சித்திருப்பதாக அந்த அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, அக்குரச தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து தென்பகுதியில் விசேட பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக பாதுகாப்புத் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply