கூட்டமைப்பு கிழக்கு மக்களை ஏமாற்றிவிட்டது – முரளிதரன்
நிறைவேற்று சபையில் பங்கேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மத்திய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை நிராகரித்தும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொள்வதற்கான முயற்சி இருந்து பின்வாங்கியும் கிழக்கின் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விநாயக மூர்த்தி முரளிதரன் நேற்று சபையில் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்ட தேர்தலின் பின்னரான வன்முறைகள் எனும் தலைப்பிலான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.உறுப்பினர் முரளிதரன் இங்கு மேலும் கூறுகையில்;
வன்முறைகள் எனும் போது அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. வன்முறைகள் தவிர்க்கப்பட வேண்டும். 2004 ஆம் ஆண்டு காலப் பகுதயில் நான் எடுத்த முடிவும் இந்நாட்டின் சமாதானத்துக்கு பங்காக இருக்கின்றது.
இந்நாட்டின் இன்றைய சமாதான சூழலுக்கு எனது பங்களிப்பும் இருக்கின்றது. என்பதை இன்றைய ஜனாதிபதியும் பிரதமரும் மற்றும் இந்த சபையில் இருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும் கூட அறிந்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூட இன்று சுதந்திரமாக செயற்படுவதற்கு நான் எடுத்தமுடிவும் காரணமாகவிருகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இருந்த போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது. இன்றைய அரசாங்கத்தின் நிறைவேற்று சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்கின்றது. ஆனால், அமைச்சர் பதவியை நிராகரித்துள்ளது. நிறைவேற்று சபையில் அங்கம் வகிக்க முடியுமானால் அமைச்சுப் பதவி ஒன்றைப் பெற்றுக் கொண்டிருக்க முடியும்.
மேலும், கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியைப் பெற்றுக் கொள்ளும் விடயத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறிழைத்து விட்டது.
முஸ்லிம்களைப் பொருத்த வரையில் மத்திய அரசிலும் கிழக்கிலும் என அமைச்சுக்களைப் பெற்றுள்ளது. எனினும் மத்திய அரசாங்கத்தின் யாழ். மாவட்டத்திற்கென இரு அமைச்சுக்களே இருக்கின்றன. தமிழ் மக்களுக்கென கிழக்கில் ஒரு அமைச்சேனும் கிடையாது.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியைப் பெற்றுக் கொள்ள முயற்சித்ததன் மூலம் மத்திய அரசில் அமைச்சுப் பதவியொன்றை பெற்றுக் கொள்வதன் மூலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றி விட்டது என்றே கூற வேண்டும்.
இன்று சிறந்ததொரு ஆட்சி மலர்ந்திருக்கின்றது.
இங்கு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதால் மாற்றுக் கருத்து இல்லை. சுதந்திரக் கட்சியிலும் குற்றமிழைத்தவர்கள் இருக்கலாம்.
ஆனாலும் ஜனாதிபதியைப் போன்றவர்களும் இருக்கின்றனர்.
அரசாங்கத்தின் சிறந்த செயற்பாடுகளுக்கு நாம் முழுமையான ஆதரவினை வழங்குவோம். அரசாங்கம் சட்டம் ஒழுங்கைப் பேண வேண்டும். அதனை வலுப்படுத்த வேண்டும்.
மேலும், பத்து வருடங்களுக்கு முன்னதாக என்னால் எடுக்கப்பட்ட முடிவு மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானச் சூழல் ஆகியவற்றின் மூலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சுதந்திரத்தின நிகழ்வில் கலந்து கொள்வதற்கான இயலுமையும் ஏற்பட்டது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply