ஐ.நா தாமதம் குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துவிடக் கூடாது : மன்னிப்புச் சபை

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை பிற்போடப்பட்டுள்ளமை குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்புவதற்கு ஏதுவாக அமைந்துவிடக் கூடாதென சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருந்தது. எனினும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதை பிற்போடுமாறு இலங்கை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட ஐநா மனித உரிமை ஆணையாளர் ஷெயித் அல் ஹுசைன் அறிக்கை தாக்கலை 6 மாதங்களுக்கு பிற்போட்டுள்ளார்.

இந்நிலையில் ஐநா மனித உரிமை கவுன்ஸிலின் இந்த முடிவு இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பிலான குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்க இடமளிக்க ஏதுவதாக அமைந்துவிடக் கூடாதென சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய வலய பணிப்பாளர் ரிச்சாட் பெனாட் தெரிவித்துள்ளார்.

ஐநாவின் அறிவிப்பு அறிக்கையை மேலும் வலுப்படுத்தி உறுதியான ஆவணத்தை தயாரிக்க வழியேற்படுத்தும் என்றும் இலங்கை அதிகாரிகளின் பொறுப்புக்கூறலை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாமதம் நியாயமானதெனவும் மோதல் சகாப்த முறைகேடுகளை விசாரிக்க மற்றும் குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டுவர ஐ.நா – இலங்கை இணைந்து செயல்பட உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சாட்சியளித்தவர்களுக்கு நீதி வழங்க மனித உரிமை கவுன்ஸில் விழித்திருக்க வேண்டும் எனவும் சாட்சியாளர்கள் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய வலய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply