அறிக்கையை தாமதிக்கும் தீர்மானத்துக்கு இலங்கை, அமெரிக்கா வரவேற்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதை மேலும் ஆறு மாதங்கள் ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாக இலங்கை மற்றும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சுக்கள் தெரிவித்துள்ளன. விசாரணை அறிக்கையை தற்காலிகமாக ஆறு மாதங்கள் பிற்போடுவதை வரவேற்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காலதாமதப்படுத்துவது, சிறந்த மாற்று வழியாக இருப்பதுடன், புதிய அரசாங்கம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு வழங்கும் கால அவகாசமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தீர்மானத்தை வரவேற்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்திருப்பதாக சர்வதேச செய்திச் சேவைகள் குறிப்பிட்டுள்ளன.
அதேநேரம், பொறுப்புக் கூறும் தன்மையை உறுதிப்படுத்த புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கும் தருணத்தில் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை பிற்போட ஐ.நா. மனித உரிமைகள் பேரவை முன்வந்திருப்பது காலத்துக்கு ஏற்புடையது என இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமையானது உள்ளூர் விசாரணை நடவடிக்கைகளுக்கு மேலும் கால அவகாசத்தை வழங்கும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை குறித்த அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கள் பேரவையில் முன்வைக்கப்படவிருந்தது. இலங்கையில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற் றத்தையடுத்து புதிய அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். எனவே, விசாரணை அறிக்கையை வெளியி டுவது ஒத்திவைக்கப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் ஐ.நா.விடம் கோரிக்கை விடுத்தது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்ததுடன், விசாரணை அறிக்கையைப் பிற்போடுவது தொடர்பில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். அதேநேரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட பிரநிதிதி ஜயந்த தனபால ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரைச் சந்தித்து இது தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், குறித்த விசாரணை அறிக்கையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை ஒத்தி வைப்பதற்கு பரிந்துரை செய்வதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கு அறிவித்துள்ளார். இலங்கையில் மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், அறிக்கையை மேலும் பலப்படுத்துவதற்கு புதிய தகவல்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதால் இந்தப் பரிந்துரையைச் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து விதமான மனித உரிமை விடயங்களுக்கும் முழுமையான ஒத்து ழைப்பு வழங்கத் தயார் என புதிய அரசாங்கம் கூறியிருப்பதுடன், இதனை நடைமுறைப்படுத்த அவர்களின் அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். விசாரணை அறிக்கையை பிற்போடும் முடிவானது நன்கு ஆராய்ந்து எடுக்கப்பட்டிருப்பதுடன், பிழை செய்தவர்கள் தப்பிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படாது என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டத்திருத்தங்களைக் கொண்டுவந்து பொறுப்புக் கூறும் தன்மையை உறுதிப்படுத்த இருப்பதாக இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துக்கு உறுதி வழங்கியுள்ள நிலையிலேயே ஐ.நா. விசாரணை அறிக்கை பிற் போடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையைப் பிற்போடுவதற்கு எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானம் தொடர்பில் கவலையோ மகிழ்ச்சியோ அழிக்கவில்லையெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்படுவதானது புதிய விடயங்களை விசாரணைக் குழுவில் முன்வைப்பதற்கு வழிவகுக்கும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கு கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. எனினும், இந்த விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என கடந்த அரசாங்கம் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றியிருந்தது.
இந்த நிலையில், புதிதாக ஆட்சி யமைத்திருக்கும் அரசாங்கம் இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து உள்ளூர் பொறிமுறையில் விசாரணைகள் நடத்தப்படும் எனக் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply