உண்மைகளைக் கண்டறிவதற்கு இறுதிவாய்ப்பு : சுமந்திரன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான யுத்த குற்ற விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டிருப்பதானது இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறிமுறையினை பலப்படுத்தி உண்மைகளை கண்டறிய கிடைத்துள்ள இறுதி வாய்ப்பாக கருதவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டிருப்பதன் மூலம் இதுவரை வெளிவராத பல உண்மைகள் வெளிவரும் சாத்தியம் உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான அறிக்கை வெளிவருமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறித்த அறிக்கை பிற்போடப்பட்டுள்ளமை தொடர்பில் கூட்டமைப்பிடம் வினவிய போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இலங்கையில் யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதென்பது சர்வதேசத்தின் தீர்மானம். இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சென்ற வருடம் மார்ச் மாதம் ஐ.நா. வினால் தீர்மானமொன்று கொண்டு வரப்பட்டது. இதற்கமைய உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பது எம் அனைவரினதும் கோரிக்கை.
அதேபோல் நல்லிணக்க செயற்பாட்டினை இலங்கையில் ஏற்படுத்த வேண்டுமாயின் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். இதனையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்திடமும் இலங்கை அரசாங்கத்திடமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.
எனினும் கடந்த காலங்களில் உள்ளக விசாரணைகள் மற்றும் சர்வதேச விசாரணை பொறிமுறை தொடர்பில் முன்னைய அரசாங்கம் அக்கறையின்றியே செயற்பட்டது. யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தீர்வுகளை காணவோ விசாரணைகள் மூலம் உண்மைகளை கண்டறியவோ கடந்த அரசாங்கம் முயற்சிக்கவோ அக்கறை செலுத்தவோ இல்லை.
அவ்வாறானதொரு நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் தற்போது உள்ளக மற்றும் சர்வதேச விசாரணைகள் தொடர்பில் புதிய அரசாங்கம் அக்கறை செலுத்துகின்றமை முக்கியமானதொரு மாற்றமாகும். உள்ளக விசாரணைகளை பலப்படுத்தி தீர்வு காணும் நோக்கில் சர்வதேச விசாரணை அறிக்கையினை பிற்போட அரசாங்கம் கால அவகாசம் கேட்டுள்ளது. இதுவரை காலமும் அரசாங்கம் சர்வதேச விசாரணை பிற்போடப்படுவதற்கான காரணத்தினை தெளிவாக தெரிவிக்காததன் காரணத்தினாலேயே அடுத்த மாதம் ஐ.நா. அறிக்கையினை வெளியிடக் கோரியிருந்தோம்.
எனினும் தற்போது ஐ.நா. விசாரணை அறிக்கையினை பிற்போடுவதற்கு அதுவும் 6 மாத காலத்திற்கு மட்டும் பிற்போடப்படுவது என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதுவும் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை இலங்கை அரசாங்கத்திற்கு உண்மையை கண்டறியும் உள்ளகப் பொறிமுறையினை பலப்படுத்தக்கோரி கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் இலங்கையில் தற்போது ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் எந்த அளவிற்கு சாதகமானதென்பது தொடர்பில் நாம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
ஆயினும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ள உள்ளக விசாரணை செயற்பாடுகள் மற்றும் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை செயற்பாடுகள் தொடர்பில் உண்மைகளை கண்டறிய செயற்படுவது என்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.
எனவே சர்வதேச அழுத்தத்துடன் இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறிமுறையினை பலப்படுத்தி விசாரணைகளை மேற்கொள்வதன் மூலம் இதுவரை வெளிவராத புதிய உண்மைகள் வெளிவருவதற்கான சாத்தியம் அதிகமாகவே உள்ளது. அத்தோடு உள்ளக விசாரணைப் பொறிமுறையினை மேலும் பலப்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள இறுதி சந்தர்ப்பம் இதுவே. எனவே இதனை இலங்கை அரசாங்கம் மிகச் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply