6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்
ராணுவ அமைச்சகத்தின், பாதுகாப்புக்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. அப்போது, இந்தியாவின் கடல்பாதுகாப்பையும், கடற்படையின் பலத்தையும் உறுதி செய்யும் விதமாக நீர்மூழ்கி கப்பல்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இது குறித்து ராணுவ அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில் அடுத்த 30 ஆண்டுகளுக்குள் இந்திய கடற்படைக்கு மொத்தம் 24 நீர்மூழ்கி கப்பல்கள் கட்டப்படும். இதில் 18 நீர் மூழ்கி கப்பல்கள் டீசல் சக்தியால் இயங்கும் மரபு சார்ந்தவை. இதர 6 நீர் மூழ்கி கப்பல்களும் அணுசக்தியால் இயங்கும் விதத்தில் தயாரிக்கப்படும். இந்த 6 நீர்மூழ்கிகப்பல்களும் துரிதமாக செயல்பட்டு எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கவல்லவை என்று தெரிவித்தன.
இந்திய கடற்படைக்கு அவ்வப்போது நவீன போர்க்கப்பல்கள், விமானம் தாங்கி கப்பல்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. 1999-ம் ஆண்டு 24 மரபு சார்ந்த நீர்மூழ்கி கப்பல்களை இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. அதன்படி 2012-ம் ஆண்டுக்குள் 12 நீர் மூழ்கி கப்பல்களும், 2030-ம் ஆண்டுக்குள் இன்னும் 12 நீர்மூழ்கி கப்பல்களும் கட்டி முடிக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
எனினும் நிர்ணயித்த கால கட்டமான 2012-ம் ஆண்டுக்குள் ஒரு நீர்மூழ்கி கப்பல் கூட இந்தியாவில் கட்டப்பட்டு கடற்படையில் சேர்க்கப்படவில்லை. இதன் காரணமாகத்தான் நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கான திட்டத்தை தற்போது, மத்திய அரசு மாற்றி அமைத்து இருப்பதாகவும் ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், மரபு சார்ந்த நீர்மூழ்கி கப்பல்கள் போல நீண்ட நேரம் நவீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் நீருக்கு மேலே தங்கி இருக்க வேண்டியது, அவசியமில்லை என்பதால் அதற்கேற்ற வசதிகளுடன் இந்த அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் விரைந்து சென்றும், எதிரி கப்பல்களின் பார்வையில் இருந்து மறைந்தும் அதிரடி தாக்குதல் நடத்தக்கூடிய 7 அதிநவீன போர்க்கப்பல்களையும் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இதில் 4 கப்பல்கள் மசாகான் டாக் நிறுவனத்தால் கட்டப்படும்.
மற்ற 3 கப்பல்கள் கொல்கத்தாவில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில் கட்டப்படும். இந்த கப்பல்களை கட்டுவதற்கு ரூ.1 லட்சம் கோடி செலவு பிடிக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.
மூலம்/ஆக்கம் : கருத்துக்களம்You can leave a response, or trackback from your own site.
Leave a Reply