சர்வதேச விசாரணைக்கு தேவை ஏற்படவில்லை நம்பிக்கையான உள்ளக விசாரணை பொறிமுறையே அவசியம் : மங்கள சமரவீர
மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பகமான சுயாதீன தேசிய உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்று உருவாக்கப்படும். புதிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தொடர்பில் வட மாகாண சபையும். வட பகுதி மக்களும், அரசியல் தலைவர்களும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 23/3 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க் கட்சித் தலைவர் நேற்று முன்தினம் எழுப்பிய கேள்விக்கு நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்.
2009 ஆம் ஆண்டு இலங்கை வந்திருந்த ஐ. நா. செயலாளர் நாயகத்துக்கு சர்வதேச தரத்துக்கு அமைய உள்ளக விசாரணை நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியிருந்தார். ஆனால் இந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. இதனாலேயே இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைக்கான சூழல் ஏற்படுத்தப்பட்டது.
எனினும் சர்வதேச விசாரணையொன்றுக்கான அவசியம் இல்லையென்பதே எமது உறுதியான நம்பிக்கை. நம்பகமான உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்றே அவசியம் என்பதை நாம் அன்றும் கூறியிருந்தோம் எமது இந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.
சர்வதேச விசாரணை நடத்தப்படும் என நாம் மக்களுக்கு உறுதிமொழி வழங்கியிருக்க வில்லை. விசாரணைக்கான உள்ளகப் பொறிமுறையொன்று நடத்தப்படும் என்றே கூறியிருந்தோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உரோம சட்டத்தில் நாம் கைச்சாத்திட வில்லையென்பதால் போர்க்குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க முடியாது. உள்ளக பொறிமுறையொன்றின் ஊடாக விசாரணை நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்றுவதற்குத் தேவையான பின்புலத்தை நாம் தயார்செய்து வருகின்றோம். இதன் ஒரு அங்கமாக சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசர் நீக்கப்பட்டு சர்வதேசத்தாலும், தேசிய ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்படும் நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தப் பட்டுள்ளது. தேசிய சுயாதீன விசாரணைகளை சர்வதேச உதவிகளுடன் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மட்டுமன்றி சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் ஒத்துழைப்புக் களையும் பெற்று தேசிய சுயாதீன உள்ளக விசாரணையை ஏற்படுத்துவோம். சர்வதேசத்தைப் பகைத்துக்கொண்டு நாம் செயற்பட முடியாது. எனவே சர்வதேசத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு உள்ளகப் பொறிமுறையின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்போம்.
எந்தவொரு நாட்டிலும் பாதுகாப்புப் படையினர் நூறு வீதம் பிழையற்றவர்களாக இருக்க மாட்டார்கள். எமது தேசிய சுயாதீன விசாரணைப்பொறிமுறையின் ஊடாக பிழை செய்தவர்களுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும். அது மட்டுமன்றி கடந்த அரசாங்கம் பாதுகாப்புப் படையினரின் நற்பெயரை இல்லாமல் செய்திருந்தது. பாதுகாப்புப் படையினர் விவசாயம் செய்வதற்கும், வீதிகளைக் கூட்டுவதற்கும். ஹோட்டல்களை நடத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டனர். இதனால் அவர்களின் கெளரவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் இழந்த கெளரவத்தையும் பெற்றுக் கொடுப்பதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
அரசாங்கம் முன்னெடுக்கவிருக்கும் தேசிய சுயாதீன உள்ளக விசாரணைப் பொறிமுறை தொடர்பில் வட மாகாண சபையும் வடபகுதி மக்களும் மற்றும் அரசியல் தலைவர்களும் நம்பிக்கை கொள்ள வேண்டும். நாம் கூறிய விடயங்களையே நிறைவேற்றுவோம்.
எந்தவொரு தரப்பினருக்கும் இனவாதத்தை தூண்டுவதற்கு அனுமதி வழங்கப்படாது. தமிழ், சிங்கள, முஸ்லிம் உள்ளிட்ட சகல இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழும் சூழலை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply