சீனாவின் துறைமுக நகரத்திட்டத்தின் “தலைவிதி” ஒரு வாரத்தில் முடிவாகும் : ஹர்ஷ டி சில்வா
சீனாவின் கொழும்புதுறைமுக நகரத்திட்டம் தொடர்பான மீளாய்வு அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் கிடைத்து விடும். அதன் பின்னரே அத்திட்டத்தின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ஊழல் மோசடிக்காரர்கள் சூட்சுமமாக அவற்றை மேற் கொண்டிருப்பதாலேயே திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி திட்டமிடல் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவிக்கையில்,
சீனாவின் கொழும்பு துறைமுக நகரத்திட்டம் தொடர்பாக ஆராய்வதற்கும் இதன் சூழலியல் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட மீளாய்வு நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார். இக்குழு தற்போது இவ்விடயத்தை ஆழமாக ஆராய்ந்து வருகின்றது.
கடந்த கால ஆட்சியாளர்கள் இத்திட்டம் தொடர்பாக அமைச்சரவையில் விவாதிக்காது அனுமதியை பெற்றுக்கொள்ளாது சூழல் பாதிப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தாது தன்னிச்சையாக இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. எனவே தற்போது புதிய அரசாங்கம் இதன் சாதக பாதகங்களை ஆராய நிபுணர் குழுவை நியமித்துள்ளது.
அதன் அறிக்கை இன்னும் ஒரு வாரத்திற்குள் கிடைத்து விடும். அதன் பின்னர் இத்திட்டத்தை முன்னெடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும்.
இதேவேளை திருகோணமலை விமானப்படைத்தளத்தை சீனாவுக்கு வழங்குவது தொடர்பான தகவல்கள் எனக்கு தெரியாது.
கடந்த ஆட்சியில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட திருடர்கள் அதனை மிகவும் சூட்சுமமாக முன்னெடுத்துள்ளனர். எனவே ஆதாரங்களுடன் கண்டுபிடிப்பதற்கு காலதாமதம் ஏற்படுகின்றது.
விசாரணைகள் எதுவும் இன்றி சாட்சியங்கள் இன்றி ஆட்களை கைது செய்து சிறைகளில் அடைக்க முடியாது. அதனை நல்லாட்சி என்று கூற முடியாது. எனவே தற்போது படிப்படியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஊழல் மோசடிகளின் வங்கி கணக்குகளை பரிசீலிப்பதற்காக நீதிமன்றம் இரகசிய பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. பொதுத் தேர்தல் இலக்குகளை வைத்து இந்த நடவடிக்கைகளை தாமதிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லையென்றும் அமைச்சர் ஹர்ஷ த சில்வா தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply