பொலிஸாரின் தாக்குதலில் சிறைக் கைதி மரணம்
சட்டவிரோத மதுபான போத்தல்கள் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதான ஹம்பாந்தோட்டை சூரியவெவ விஹாரகல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான நபர் பொலிஸாரின் தாக்குதல் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என சட்ட வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி தாக்குதலில் சம்பந்தப்பட்ட சார்ஜன் உட்பட 6 பொலிஸார் கைதாகியிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். 35 வயதான லியனாராச்சிகே சமந்த என்ற நபர் சட்டவிரோத மதுபான போத்தல்கள் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 19ஆம் திகதி கைதானார்.இவர் கைது செய்யப்பட்ட இடத்தில் வீட்டிற்கு அருகாமையில் வைத்து கைகள் கட்டப்பட்ட நிலையில் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
20ம் திகதி காலை 7.00 மணியளவில் சிறைக்கூடத்தில் இவர் வீழ்ந்து கிடந்ததையடுத்து 7.35 மணிக்கு ஹம்பாந்தோட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 22ஆம் திகதி 4.30 மணியளவில் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.
இந்த மரணம் குறித்து மஜிஸ்திரேட் நேரில் சென்று பார்வையிட்டதுடன் சட்ட வைத்திய அதிகாரியும் மரண விசாரணைகளை மேற்கொண்டார். கூர்மையற்ற ஆயுதமொன்றினால் தாக்கப் பட்டதாலேயே இவர் உயிரிழந்துள்ளதாக சட்டவைத்திய அதிகாரி தெரிவித்துள்ள தையடுத்து மேற்படி நபரை கைது செய்வதற்காகச் சென்ற சார்ஜன்ட் ஒருவர் உட்பட 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களது சேவை இடைநிறுத்தப்படும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையம் சென்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த சாட்சியாளர்கள் மற்றொரு வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். இச்சம்வத்தில் ஒரு சாட்சியாளர் சம்பவ இடத்தில் மரணமாகியுள்ளார்.
மேற்படி பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி மரணமான சம்பவத்துக்கும் விபத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லை. சாட்சியாளர்கள் வந்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் வந்த வேன் ஒன்றும் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இருதய நோயாளி ஒருவரை அவசர அவசரமாக ஹம்பாந்தோட்டை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த வேனை செலுத்தி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். கடமை முடிந்து வீடுவந்த போது தனது வீட்டுக்கு அருகே ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து தானே முன்வந்து இந்த நோயாளியை வானில் ஹம்பாந்தோட்டை எடுத்துச் சென்றுள்ளார். முச்சக்கர வண்டியின் தவறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply