புரூஸ் ஃபெயின் 3 மில்லியன் டொலர்கள் கோரி எழுதிய கடிதம் கனடா உலகத் தமிழர் இயக்கத்தில் நடந்த சோதனையில் கண்டு பிடிப்பு.

புலிகள் இயக்கம் யுத்த ஆயுதங்கள், யுத்த கருவிகள், உபகரணங்களைச் சர்வதேச ரீதியில் கொள்வனவு செய்வதற்காக கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், சுவிற்சர்லாந்து, நோர்வே போன்ற பல்வேறு மேற்கத்திய நாடுகளிலும் இயங்கிவரும் புலிகள் சார்பு அமைப்புகளும் பெருந்தொகையான நிதி உதவிகளைச் செய்துவந்துள்ளன. அந்த நாடுகள் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பாக அரசாங்கங்களால் தீர்மானிக்கப்பட்டுச் சட்டபூர்வமாகத் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் மேற்படி அமைப்புகள் தமிழர்களுக்கு உதவும் பொது அமைப்புகள் என்ற பெயரில் இயங்கிக்கொண்டு தொடர்ந்தும் பெருந்தொகையான பணத்தை அங்கு வாழும் தமிழர்களிடம் சேகரித்து வருகின்றன.

கனடாவில் இவ்வாறு புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்பதும் கனடா சமஷ்டிப் (பெடரல்) பொலிஸ் துறையால் அண்மைக்காலங்களில் பின் தொடரப்பட்டு வந்ததுமாகிய உலகத் தழிழர் இயக்கம் என்ற அமைப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் பொறுப்பெடுக்கவும் கனடா அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கனடா அரசு தீர்மானம் செய்வதற்கு முன்னர் கனடா உலகத் தமிழர் இயக்கம் அமைப்பைத் தடைசெய்யும்படி கோரி கனடா சமஷ்டிப்(பெடரல்) பொலிஸ் துறையால் கனடா சமஷ்டி (பெடரல்) நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்காக கனடா பெடரல் பொலிஸ் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவு உத்தியோகத்தர்கள் 300 பக்கங்கள் அடங்கிய குற்றச்சாட்டு அறிக்கையை பெடரல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர். இந்த அறிக்கையுடன் குறித்த கனடா உலகத் தமிழர் இயக்கத்துக்கும் பயங்கரவாதப் புலிகள் அமைப்புகளுக்கும் இடையே நிலவிவந்த நெருங்கிய நிதித்தொடர்புகள், ஆயுதக் கொள்வனவுகளை, உதவிகளை சர்வதேசத்தொடர்புகள் ஆகியவற்றை நிரூபிக்கும் இரகசியப் பத்திரங்களும் கனடா பெடரல் பொலிஸ் தரப்பால் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த இரகசியக் கடிதங்களிடையே புலிகள் இயக்கத்தின் திட்டமிட்ட சிறிலாங்கா அரசுக்கு எதிரான வழக்கு நடவடிக்கை ஒன்றுக்காக, ரொனால்ட் ரீகனின் ஆட்சிக் காலத்தில் அஸோஸியேட் டெபுடி ஜெனரல் அட்டர்னியாகப் பணியாற்றிய புரூஸ் ஃபெயின் என்பவர் மூன்று மில்லியன் டொலர்கள் கோரி அனுப்பியிருந்த இரகசியக் கடிதமும் உள்ளதாக கனடா பெடரல் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புரூஸ் ஃபெயின் அண்மையில் யுத்தக் குற்றங்களுக்காக சிறிலங்கா பாதுகாப்புச் செயலருக்கும் இராணுவத்தளபதிக்கும் எதிராக நீதிவிசாரணை நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கோரி அமெரிக்க நீதித் திணைக்களத்துக்கு வழங்குத் தாக்கல் செய்தவராகும். இதற்காக பாதுகாப்புச் செயலருக்கும் இராணுவத்தளபதிக்கும் எதிராக பல்வேறு யுத்தக்குற்றங்களைப் பட்டியலிட்டு 100 பக்கங்கள் கொண்ட குற்றச்சாட்டு அறிக்கையை புரூஸ் ஃபெயின் சமர்ப்பித்திருந்தார். இந்தத் தகவலை அவரே அண்மையில் இங்கிலாந்து ஹறோ நகரிலுள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் நிகழ்ந்த புலி ஆதரவாளர்களின் சந்திப்பு ஒன்றில் பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

இந்த நிகழ்வின் போது புரூஸ் ஃபெயின் மேலும் தெரிவிக்கையில்; சிறிலங்காவில் நிகழும் தமிழர் கொலைகள் உட்பட மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை அமெரிக்க நிதித் திணைக்களத்தில் தொடர்ந்து சமர்ப்பிப்பதற்காக அனுப்பிவைக்கும்படியும் இதனைப் பயன்படுத்த சிறிலங்கா அரசுக்கு எதிரான நீதி நடவடிக்கைகளை அமெரிக்காவில் எடுத்துவருவதாகவும் இதன் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மீதும் இராணுவத் தளபதி மீதும் யுத்தக் குற்றங்கள் சுமத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

இந்த நீதிமன்றத் திணைக்கள நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே புரூஸ் ஃபெயின் 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணத்தொகையை புலிகள் இயக்கத்திடமிருந்து பெற்றுள்ளார். இவர் இவ்வாறு 3 மில்லியன் டொலர்கள் கோரி எழுதிய கடிதத்தையே தற்போது கனடா பெடரல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கனடா உலகத் தமிழர் காங்கிரஸ் அமைப்பின் அலுவலகத்தில் மேற்கொண்ட தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கையின்போது கண்டு பிடித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply