வரலாற்றுச் சந்தர்ப்பத்தை இலங்கை சரியாக பயன்படுத்த வேண்டும் ஐ.நா. அரசியல் விவகார செயலர் ஜெப்ரி பெல்ட்மன்
நம்பகமான, பொறுப் புக்கூறக்கூடிய சர்வதேச தரத்திலான உள்ளக நல்லிணக்கப் பொறி முறையொன்றை ஏற்படுத்துவதற்குக் கிடைத்திருக்கும் வரலாற்று சந்தர்ப்பத்தை இலங்கை சரியாகப் பயன்படுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் மூலம் இந்த சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் கூறியுள்ளார். ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சர்வதேசத்தின் பாரிய ஒத்துழைப்புடன், நம்பகமான, பொறுப்புக்கூறக்கூடிய சர்வதேச தரத்திலான உள்ளக நல்லிணக்கப் பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு வரலாற்று ரீதியான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டு மக்களுக்கு நன்மையைப் பெற்றுக்கொடுக்க முடியும்.
தனது விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்கள் வித்தியாசமாக அமைந்திருந்ததுடன், அவை எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி யிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “இலங்கை முழுவதிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
ஒவ்வொரு சமூகமும் பாதிக்கப்பட்டிருப் பதுடன், வடபகுதி மக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் விடயத்தில் பொறுப்புக்கூறும் கடப்பாடு உறுதிப் படுத்தப்பட வேண்டும். அனைவரும் கவனத்தில் கொள்ளப்படுவதாக மக்கள் உணரவேண்டும்” என்றும் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில் 2009ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு ஐ.நா செயலாளர் நாயகத்தின் ஒத்துழைப்புத் தொடர்பில் தனது இலங்கை விஜயத்தின் போது எடுத்துக் கூறியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள முகாம்களை விடுவித்தல் போன்ற ஆரம்பகட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதன் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும் ஜெப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச தரத்துக்கு அமைய அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஜெப்ரி பெல்ட்மன்னிடமும் உறுதியளித் திருந்தது. இவ்வாறு செய்ததன் மூலம் இலங்கை அரசாங்கம் தன்மீதான கவனத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இவ்வாறான நிலையில் தமது செயற்பாடுகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அறிவிக்க வேண்டும் என்றும் பெல்ட்மன் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துக் குழுக்களுக்குமிடையில் குழப்பமானதொரு சூழ்நிலை காணப் படுகிறது. இருந்தபோதும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றாக இணைந்து செயற்படவேண்டி யுள்ளது.அரசாங்கம் அர்ப்பணிப்புடன் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றுமா என்ற ஐயப்பாடுகள் வடபகுதியிலுள்ள மக்கள் மத்தியில் அதிகமாகக் காணப்படுவதாகவும் ஜெப்ரி பெல்ட்மன் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இருந்தபோதும் இந்த நோக்கம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் அங்கிருந்து புறப்பட்டிருந்தேன். ஐக்கிய நாடுகள் சபை தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்குத் தயாராக உள்ளது. இது இலங்கை மக்களுக்கு மிகவும் முக்கியமானது” என்றும் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந் ததுடன், அரசாங்க மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்களைச் சந்தித்திருந்தார். வடபகுதிக்கும் சென்றிருந்தமை குறிப் பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply