மொரீஷியஸ் வளர்ச்சிக்கு இந்தியா உதவி
இந்தியா-மொரிஷியஸ் இடையே புதிதாக 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மொரிஷியஸ் நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா சார்பில் சுமார் 300 கோடி ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். செஷல்ஸ், மொரிஷியஸ் மற்றும் இலங்கை நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். செஷல்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு மொரிஷியஸ் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்நாட்டு பிரதமர் அனிரூத் ஜெக்நாத்தை சந்தித்துப் பேசிய மோடி இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே புதிதாக 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, மொரிஷியஸ் நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சிக்காக இந்தியாவின் சார்பில் சுமார் 300 கோடி ரூபாய் நிதியுதவியாக அளிக்கப்படும் என்றார்.
பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில் இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர பங்களிப்பு, கலாசார துறையில் ஒத்துழைப்பு, கடல்சார் வணிகத்தை மேம்படுத்துதல் உட்பட 5 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மொரீஷியஸில் 2வது சைபர் நகரத்தை உருவாக்க இந்தியா உதவி செய்யும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பின்னர் பேசிய மொரீஷியஸ் பிரதமர் அனிரூத் ஜெக்நாத், நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சிக்காக இந்தியா அளிக்க உள்ள பங்களிப்பு குறித்து பேசினார்.
மொரீஷியஸ் நாட்டின் தேசிய தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக மோடி பங்கேற்கிறார்.
இருநாட்டு உறவுகள் குறித்தும் மீண்டும் மொரீஷியஸ் பிரதமருடன், மோடி விவாதிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி நாளை இலங்கை செல்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply