நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்கும் அரசியல் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்

நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பதற்கான அரசியல் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். அவ்வாறு ஜனாதிபதி வசம் சில அதிகாரங்கள் இருப்பதாயின் அது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என ஜே. வி. பி. தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் ஜே. வி. பியின் தலைமையகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அரசியலமைப்புத் திருத்தம், புதிய தேர்தல் முறை மற்றும் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக ஜே. வி. பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இருந்த போதும் சில நடைமுறைக் காரணங்களால் முதற்கட்டமாக நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் ஜனாதிபதியிடம் சில அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் வழங்குவதாயின் தற்போதுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் வரையில் அவ்வாறான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதுடன் அதன் பின்னர் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் அதிகாரங்களை நீக்குவதற்கு அரசியலமைப்பு ரீதியான மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என ரில்வின் சில்வா தெரிவித்தார்.

அவ்வாறானதொரு அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு வழங்குவதற்கு தயார் என மத்திய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், புதிய தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை அளிக்கக்கூடிய வகையிலும், ஜனநாயகம் மற்றும் மக்களின் வாக்களிக்கும் உரிமையை மேலும் உறுதிப்படுத்தக் கூடிய வகையிலும் தயாரிக்கப்படும் புதிய தேர்தல் முறை மாற்றத்துக்கு ஆதரவு வழங்குவதென தமது மத்திய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக ரில்வின் சில்வா தெரிவித்தார்.

அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிமொழி வழங்கிய நூறு நாள் வேலைத் திட்டம் பூர்த்தியடைந்ததும். ஏப்ரல் மாதத்துடன் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என மத்திய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறிய ரில்வின் சில்வா, வழங்கிய உறுதிமொழிக்கு அமைய தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

எந்தக் காரணத்தையும் கூறிக்கொண்டு தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply