பக்கச்சார்பற்ற விசாரணை ஆரம்பம்: தெரிவுக் குழு நியமிக்க அரசு தயார் : பிரதமர் ரணில் விக்ரமசிங்க
மத்திய வங்கி திறைசேரி முறி விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுயாதீன விசாரணைக்கு வழியமைக்கும் வகையில் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் விடுமுறையில் சென்றிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். இது தொடர்பான விசாரணை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தேவையானால் இது குறித்து ஆராய்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் கூறினார். 23/3 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அரசாங்கத்துக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட சந்தர்ப் பத்தில் அதுகுறித்து பதில் வழங்கவும், குற்றச்சாட்டுக் குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கவும் இந்த செயற்பாடுகள் குறித்து பாராளுமன்றத்தில் அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது அண்மைய வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும் என்றும் தெரிவித்தார்.
ஆனால் கடந்த காலத்தில் இவ்வாறான விடயங்கள் குறித்து பாராளுமன்றத்துக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை. கடந்த காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து நாம் சபையில் பகிரங்கப்படுத் தினாலும் அரசாங்கம் அவற்றுக்கு சரியான பதில் வழங்கவில்லை. திறைசேரி முறி தொடர்பான விவகாரத்தில் நான் மெளனமாக இருக்கவில்லை. எனது மெளனத்தை தவறாக கருதக்கூடாது. இந்த விவகாரம் தொடர்பான முதலாவது அறிவிப்பை பாராளுமன்றத்திலேயே வெளியிட வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நெடுஞ் சாலை அமைச்சின் ஊடாக எதுவித நிதி ஒதுக்கீடும் மேற்கொள்ளாது 100 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான ஒப்பந்தங்களுக்கு கைச்சாத்திடப்பட்டி ருந்தது. இவற்றுக்கான கொடுப்பனவுகளைச் செய்வதற்கு அவசரமாக நிதி தேவைப் பட்டது. இதற்காக நிதியமைச்சர், நெடுஞ்சாலை அமைச்சர், நிதியமைச்சின் செயலாளர், மத்திய வங்கி ஆளுநர், மத்திய வங்கி பிரதி ஆளுநர் அடங்கலான அதிகாரிகள் பெப்ரவரி 26ஆம் திகதி கூடி இது குறித்து ஆராய்ந்தார்கள்.
இதன்போது 15 பில்லியன் ரூபா அவசர மாகத் தேவையெனத் தீர்மானிக்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னர் ஒரு பில்லியன் ரூபா திறைசேரி முறிக்கான கேள்விப்பத்திரம் மத்திய வங்கியின் ஊடாகக் கோரப்பட்டிருந்தது. திறைசேரி முறி தொடர்பில் தனிப்பட்ட ரீதியான வழங்குதல்களுக்குச் சென்றால் மோசடி அதிகரிக்கும் என்பதாலேயே நாம் பகிரங்க கேள்விப் பத்திரத்துக்குச் சென் றோம். கடந்த அரசாங்கத்தால் அரசாங்க திறைசேரி முறிகள் தெரிவுசெய்யப்பட்ட நபர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டிருப் பதை நாம் நன்கு அறிவோம்.
கடந்த காலத்தில் திறைசேரி முறிகள் ஏலத்தின் மூலம் வழங்கப்பட்டதைவிட தனிப்பட்ட ரீதியான வழங்குதல்களால் கேள்விப்பத்திரம் கோரப்பட்ட திறைசேரி முறிகளைவிட பத்து மடங்கு அதிகமான முறிகள் விநியோகிக்கபட்ட பல சந்தர்ப்பங்கள் உண்டு. இது மத்திய வங்கி அதிகாரிகளுக்கும், முறிகளைக் கொள்வனவு செய்யும் நிறுவனங்களுக்கும் இடையிலான உறவுகளைப் பாதித்திருந்தது. கடந்த அரசாங்கத்தில் இதுபோன்ற பல சம்பவங்கள் உண்டு.
கேள்விமனு சபையின் நடவடிக்கைகளில் மத்திய வங்கி ஆளுநர் தலையிட்டார் என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. அதன் பின் கேள்விமனு சபை தனது பரிந்துரையை முன்வைத்தது. அந்தப் பரிந்துரைகளுக்கு மத்திய வங்கி ஆளுநர் எதுவித மாற்றமும் இன்றி அனுமதி வழங்கினார். இந்த சபையில் அண்மையில் கலந்துரையாடப்பட்டது போன்று பிராந்திய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கே இந்தப் பணம் தேவைப்பட்டது. இவ்வாறான நிலையிலேயே உள்ளக ரீதியில் திறைசேறி முறி விநியோகிக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. மத்திய வங்கியின் ஆளுநர் மீதும் அவதூறு சுமத்தப் பட்டிருப்பதுடன் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.
இதன் காரணமாக 30 வருட திறைசேரி விநியோகம் தொடர்பாக ஆராய மூவர் அடங்கிய குழுவொன்று பெப்ரவரி 27ஆம் திகதி நியமிக்கப்பட்டது. இதன் தலைவராக காமினி பிட்டப்பன நியமிக்கப்பட்டுள்ளார். சட்டத்துறையில் 21 வருட அனுபவம் உள்ள அவர், பல உள்நாட்டு கம்பனிகளில் நிர்வாக செயற்பாடுகளில் அனுபவம் பெற்றவர். இந்தக் குழுவின் உறுப்பினரான மகேஷ் களுகம்பிட்டிய குற்றவியல் சட்டம் தொடர்பில் 23 வருட அனுபவம் உள்ளவர். மற்றொரு உறுப்பினரான சந்திமால் மென்டிஸ் சட்டத்தரணியாக 18 வருட அனுபவம் உள்ளவர். முன்னாள் நிதியமைச்சர் கே.எம்.சொக்சியின் கீழ் உதவி சட்டத்தரணியாகப் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.
இவர்கள் பற்றிய நம்பகத்தன்மை குறித்து சட்டத்தரணிகள் சங்கத்திடம் விசாரித்து அறிய முடியும். இவர்கள் கொள்கையை பாதுகாக்கும் வகையில் செயற்படக்கூடியவர்கள். மக்களின் மதிப்பைப் பெற்ற நபர்கள். குழுவின் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் குறித்து அடிப்படை அற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது குறித்து நான் கவலையடைகிறேன். அரசாங்கத்தை அசெளகரியத்துக்கு உட்படுத்தும் நோக்கத்திலேயே இவர்கள் குறித்து விமர்சிக்கப்படுகிறது.
இவர்கள் ஐ.தே.க சட்டத்தரணிகள் என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கடந்த காலத்தில் அநேகமான சட்டத்தரணிகள் ஐ.தே.கவுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். எமது விசாரணைகள் திறைசேரி முறி விநியோகம் தொடர்பில் மட்டும் மட்டுப்படுத்தப்பட மாட்டாது. 2012ஆம் ஆண்டு முதல் இன்றுவரை இடம்பெற்ற பகிரங்க ஏலம், தனிப்பட்ட நபர்களுக்கு திறைசேரி முறி வழங்கியமை அடங்கலான சகல கொடுக்கல், வாங்கல்கள் குறித்தும் விசாரிக்கப்படும். தேவை ஏற்பட்டால் நிபுணத்துவம் பெற்றவர்களின் உதவியை நாடவும் இந்தக் குழுவுக்கு முடியும். கடந்த காலத்தில் இடம்பெற்ற கொடுக்கல், வாங்கல்கள் முறையற்ற விதத்தில் இடம்பெற்றதால் விசாரணைகளின் போது பல ஆச்சர்யமான விடயங்கள் வெளியாகும் என நம்புகிறேன்.
கடந்த திங்கட்கிழமை முதல் அர்ஜூன மகேந்திரன் விடுமுறை பெற்றிருக்கிறார். இந்த விசாரணை முடிவடையும் வரை அவர் தமது கடமைகளிலிருந்து ஒதுங்கியிருப் பார். இது குறித்து அவர் எனக்கு அறிவித்துள்ளார். நீதியானதும், பக் கச்சார்பற்றதுமான விசாரணைக்கான பின்னணியை அவர் இதனூடாக ஏற் படுத்தியுள்ளார். கடந்த காலத்தில் இந்தப் பதவியை வகித்த நபர்கள் நடந்து கொண்ட விதத்துக்கு முற்றிலும் மாறான நிலையே இதுவாகும்.
அரசாங்கத்துக்கு எதிரான எந்தவொரு விமர்சனத்தையும் நாம் நசுக்க முற்படவில்லை. ஊடகங்கள், சிவில் சமூக அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என் பன இந்த விடயத்தில் சுதந்திரமாக கருத்துக்களைக் கூறுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக் கூறியவர்களின் வீடுகளின் முன்னால் வெள்ளைவான் வந்து நிற்கும் என்ற பயம் இல்லை. எவரும் அச்சுறுத்தல் அழைப்புக்களையோ அல்லது தொலைபேசி அழைப்புக்கள் ஒட்டுக்கேட்கப்படும் என்றோ அஞ்சத் தேவையில்லை. கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நடந்தது போன்று எதுவும் நடக்காது. பொது மக்கள் பணம் சிக்கலுக்கு உட்படுத்தப்படும்போது சகல தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும். இதுவே எமது அரசாங்கத்துக்கும் பழைய அரசாங்கத்துக்கும் இடையிலான பிரதான வித்தியாசமாகும் என்றார்.
முன்னதாகப் பேசியிருந்த ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, திறைசேரி முறி விநியோகம் குறித்த விடயத்தில் நியமிக்கப்பட்டிருக்கும் விசாரணைக் குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியிருந்தார். இதில் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் துறைசார் நிபுணர்கள் அல்ல என்றும் சட்டத்தரணிகள் மாத்திரமே என்றும் தெரிவித்திருந்தார். திறைசேரி முறி விநியோகம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநரின் மருமகனுடன் தொடர்புடைய நிறுவனத்துக்கு முன் கூட்டியே தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், இந்தக் கொடுக்கல், வாங்கலை முற்றாக நிறுத்த வேண்டும் என்றும் கோரினார்.
பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நிமல் சிறிபால டி சில்வா மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை பாதுகாக்கும் வகையிலேயே பிரதமர் உரையாற்றியிருப்பதாகவும், மத்திய வங்கியில் இடம்பெற்ற முறைகேடுகளை மறைக்க அவர் முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து ஒருநாள் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை மூடி மறைக்காது சம்பந்தப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்துமாறும் கோரினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply