சோமாலியாவில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-ஷபாப் தலைவர் பலி
அல் – ஷபாப் இயக்கத்தின் தலைவர் அதன் கரார் சோமாலியாவில் குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக் கிழமையன்று, ஹெல்ஃபயர் ஏவுகணைகளைப் பொருத்திய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருப்பதாக பெண்டகன் தெரிவித்துள்ளது. 2013ஆம் ஆண்டில் நைரோபியின் வெஸ்ட்கேட் மாலில் நடந்த தாக்குதலை கரார் நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில் 67 பேர் கொல்லப்பட்டனர்.அமெரிக்க குடிமக்கள், பிற மேலை நாட்டு நலன்களை குறிவைக்கும் நடவடிக்கைகளை கரார் பார்வையிட்டுவந்ததாக அமெரிக்கா நம்புகிறது.
பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினரான கரார், அல் – ஷபாபில் வெளிநாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுவந்ததாக பெண்டகன் கூறுகிறது.
மகதிஷுவிலிருந்து 240 கி.மீ. தூரத்தில் உள்ள தின்சூர் என்ற நகருக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது.
2011ஆம் ஆண்டிலிருந்து சோமாலியாவில் அடிப்படைவாதிகள் வலுவாக இருக்கும் பகுதிகளிலிருந்து ஆப்பிரிக்க யூனியன் படைகள் அவர்களை விரட்டிவருகின்றன. அந்தப் படைகளை அமெரிக்க அரசு ஆதரித்து வருகிறது.
கராரின் மரணம், சோமாலியாவில் அல் – ஷபாபின் நடவடிக்கைகளுக்கு விழுந்த அடி என அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியை பெண்டகன் உறுதிப் படுத்துவதற்கு முன்பாக, கென்யாவின் வடகிழக்கு பகுதியில் அல் – ஷபாப் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்பிரிக்க யூனியன் படையில் கென்யா பங்கேற்றிருப்பதற்கு, அந்நாட்டை தண்டிப்பதற்கு அல் – ஷபாப் உறுதிபூண்டிருக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply