தமிழ் மக்களுக்கான குறைந்தபட்ச சுதந்திரத்திற்கான இடைவெளியை கூட கடும்போக்காளர்கள் விரும்பவில்லை என்பது வருந்தத்தக்கது. ப.உதயராசா
இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடாக இருந்தபோதும் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளே பிரதான மொழிகளாக விளங்குகின்றன. இந்நிலையில் இலங்கை நாட்டின் தேசிய கீதத்தை தமிழ் மொழி மூலம் இசைப்பதற்கு சிலர் ஆட்சேபம் தெரிவித்து வருவது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. என சிறிரெலோகட்சியின் செயலாளர் நாயகம் ப. உதயராசா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்…
இலங்கையில் பூர்வீக நிலம் மற்றும் பண்பாடு கலாசார அம்சங்களை தனித்துவமாக கொண்டு நாட்டின் ஆதிக்குடிகளாக வாழ்ந்துவரும் தமிழ் மக்கள் தங்கள் மொழியை கூட காப்பாற்றமுடியாத சூழ்நிலையில் இருப்பது ஆக்கிரமிப்பின் உச்சகட்ட அடிமைத்தனத்தை உணர்த்துகிறது.
தமிழ் மக்கள் எப்போதும் சிங்கள மக்கள் மீது காழ்ப்புணர்ச்சியையோ இனவாதத்தை கக்கியதில்லை.இதனை கடந்த காலங்களில் நடைபெற்ற ஆயுத மற்றும் சனநாயக போராட்டங்களை ஆராய்ந்து பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். தமிழ் மக்களும் தமிழ் மக்களுடைய அரசியல் போராளிகளும் என்றும் இலங்கையின் இறைமைக்கு விரோதமானவர்கள் கிடையாது. தமிழ் மக்களுடைய போராட்டங்கள் அனைத்தும் சிங்கள மக்களின் கலாசார பண்பாட்டு விடயங்களை பாதிக்காதவகையில் தங்களின் நியாயமான அரசியல் உரிமைக்கோரிக்கைகளையே முன்வைத்து போராடிவந்திருக்கின்றனர்.
ஆனால் சில கடும்போக்காளர்களே அவர்களின் நியாயமான போராட்டங்களை கொச்சைப்படுத்தி அவற்றுக்கு பயங்கரவாத பட்டங்களையோ தீவிரவாத பட்டங்களையோ சூட்டமுற்பட்டனரே அன்றி அவற்றின் யதார்த்தத்தையும் நியாயப்பாடுகளையும் புரிந்துகொள்ள முற்படவில்லை.இதனால் தான் தமிழ் மக்களுடைய போராட்டங்கள் திசைமாறியதுடன் மட்டுமல்லாமல் தீவிரமும் பெற்றது.
இந்த தவறினையே பெரும்பான்மை மக்களை பிரதிநிதிப்படுத்தும் தலைவர்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். காலவோட்டத்தில் சிங்கள மக்களின் தலைவர்கள் மாறினரே அன்றி இவர்களின் சிந்தனையும் அணுகுமுறைகளும் இன்றுவரை மாறிவிடவில்லை என்பது நோக்கப்படவேண்டியதொன்றாகும்.
ஓன்று பட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வு என்று முழங்குபவர்கள் இனவாதத்தைகக்கி வன்முறையை தூண்டுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையினை கூட குறைந்தபட்சம் மேற்கொள்ளவில்லை என்பது அரசாங்கம் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறதா என்ற சந்தேகத்தை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது
ஆகவே தமிழ் மக்கள் தங்கள் இருப்புக்களை தக்கவைப்பதற்கான குறைந்தபட்ச இடைவெளியை கூட கடும்போக்காளர்கள் விரும்பவில்லை என்பது வருந்தத்தக்க விடயமாகமாறியிருப்பதுடன் கண்டிக்கத்தக்கதுமாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply