முஸ்லிம்களுக்கு இடையூறு விளைவித்தோமா? நிரூபித்தால் ஜனாதிபதி வீட்டில் எடுபிடி வேலை செய்கின்றோம்: பொதுபல சேனா
பொதுபல சேனா அமைப்பு நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு இடையூறு விளைவித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் குற்றம்சுமத்தியுள்ள நிலையில், இதனை பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அவர் நிரூபித்து காட்டினால் எமது அமைப்பை கலைத்து விட்டு நான் ஜனாதிபதி வீட்டில் எடுபிடி வேலை செய்ய தயாராக உள்ளேன். அதேபோன்று குறித்த குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாவிடின் ஜனாதிபதி, விகாரைக்கு வந்து எடுபிடி வேலைகளை செய்ய வர வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதிக்கு சவால் விடுத்தார்.
இதேவேளை நாட்டில் எல்லா பாகங்களிலும் சிங்களவர்கள் மீள்குடியேற முடியும். அதனை எதர்ப்பதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் யார்? தற்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் மிகவும் மோசமாக செயற்படுகின்றனர். எம்முடன் விளையாட வேண்டாம். நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்களை சினம் கொள்ள செய்யவேண்டாம். அவ்வாறாயின் எதிர்காலம் மிகவும் மோசமாக அமையும் எனவும் அவர் எச்சரித்தார்.
கிருலப்பனையிலுள்ள அந்த அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
யுத்தம் இடம்பெற்ற பிற்பாடு வடக்கில் தமிழ் ,முஸ்லிம்களை மீள்குடியேற்றிய போதும் சிங்களவர்களை மீள்குடியேற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்வேறு அழுத்தங்களின் பிற்பாடு வெலிஓயாவில் சிங்களவர்கள் 5000 பேர் மீள்குடியேற்றப்பட்டனர். எனினும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சிங்களவர்களை மீள்குடியேற்றிய அதிகாரிகளை மிரட்டியுள்ளார். இதற்கு எதிர்ப்பும் வெளியூட்டுள்ளார்.
நாட்டில் பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்கள் நாட்டில் அனைத்து பாகங்களிலும் குடியேற முடியும். அதனை எவராலும் கேள்விக்கு உட்படுத்தமுடியாது. எனவே வெலிஓயா குடியேற்றம் தொடர்பில் எதிர்ப்பினை வெளியிடுவதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் யார்?அவருக்கு என்ன தகுதி உள்ளது. சிறுப்பான்மை மக்கள் அனைத்து சுதந்திரங்களையும் பெற்று வாழவேண்டும். பௌத்தர்களின் உரிமைகள் கிடப்பில் போடப்பட்டால் அது தவறில்லை. இதுவா நல்லாட்சி.
அத்தோடு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முஸ்லிம்களை மீள்குடியேற்றிய போது பல்வேறு ஊழல் மோசடிகளை செய்துள்ளார். இது தொடர்பில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த விசாரணையை உரிய முறையில் முன்னெடுத்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதேவேளை தற்போது முஸ்லிம் அமைச்சர்கள் மிகவும் மோசமான முறையில் செயற்பட்டு வருகின்றனர். தமது இஷ்டப்படி துள்ளுகின்றனர். எனவே குறித்த அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்களுடன் விளையாட வேண்டாம். எம்முடன் விளையாடினால் பாரிய விளைவை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். எமது அலை இன்னும் ஓயவில்லை.
மேலும் அண்மையில் பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, லண்டன் நகரில் இடம்பெற்ற நிகழ்வின் போது நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களான முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனா அமைப்பு செயற்பட்டதாகவும் இதன் காரணமாக முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாகவும் கடுமையாக எம்மை சாடியுள்ளார் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply