நாட்டில் ஒற்றையாட்சி முறை நீக்கப்பட்டு கூட்டாட்சி கொண்டுவரப்பட வேண்டும் : முதல்வர் விக்கினேஸ்வரன்
எமது நாட்டில் ஒற்றையாட்சி முறைநீக்கப்பட்டு கூட் டாட்சி முறை கொண்டு வரப்பட வேண்டும். பலவாறான கட்டமைப்புக் குறைபாடுகளினிடையே தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கை இலங்கையில் நடைபெற்று வருகின்றது. இப்பேர்ப்பட்ட கட்டமைப்புக் குறைபாடுகள் எமது தமிழ்ப் பேசும் மக்களுக்கு விமோசனத்தை அளிக்காது நல்லாட்சியை உறுதிப்படுத்தாது, என்பதே எனது வாதம். என்று வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அதன் கீழ் அநியாயமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் பொது மன்னிப்பில் வௌிவர வேண்டும். அடுத்து அரசியல் யாப்பு இந் நாட்டை ஒரு கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டும். சமஷ்டி அடிப்படையில் வடகிழக்கு மாகாணங்களுக்கு தன்னாட்சியை உறுதிப்படுத்தும் விதத்தில் சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும். ஒற்றையாட்சி முறை கைவிடப்பட வேண்டும். சட்டவாட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும என்றும் குறிப்பிட்டார்.
13வது திருத்தச் சட்டம் மாகாணங்களுக்கு ஒரு கையால் கொடுத்து மற்றக்கையால் திருப்பி எடுப்பதாவே அமைந்துள்ளது. மாகாணங்களுக்கு அதிகாரங்களைக் கொடுப்பது போல் கொடுத்து ஆளுநர் ஊடாக மத்திய அரசாங்கம் கட்டுப்பாடுகளை, அடக்கியாளும் அதிகாரங்களைத் தன்வசம் வைத்துக் கொண்டுள்ளது. இதுவும் வடகிழக்கு மாகாண மக்களைப் பொறுத்த வரையில் நல்லாட்சிக்கு வித்திடுவதாக இல்லைஎன்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ் நாவலர் தெருதியாகி நம்பிக்கைப் பொறுப்பு கருத்தரங்க மண்டபத்திநேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
சிங்களம் நாட்டின் அரசியல் மொழி என்று ச‘ரத்து 18(1) கூறுகின்றது. 18(2)ன் படி தமிழும் ஒரு அரசியல் மொழி என்கின்றது. எதற்காக தமிழும் சிங்களமும் நாட்டின் அரசியல் மொழிகள் என்று குறிப்பிடப்படவில்லை? சிங்கள மொழியை ஒருபடி மேலே வைக்கவே இந்த ஏற்பாடு. எப்பொழுது தேசிய மட்டத்தில் ஒரு மொழி இன்னொரு மொழிக்கு உயர்வாகக் காட்டப்படுகின்றதோ அது இரு மொழிசார் மக்களிடையே ஒற்றுமையையும் சமநிலையையும் ஏற்படுத்த உதவாது. எனவே எமது மொழி, மதம் பற்றிய அரசியல் யாப்பின் ஏற்பாடுகள் நல்லாட்சிக்கு ஏற்புடைத்தாவன அல்ல.
இன்னொரு உதாரணம் தருகின்றேன் – பயங்கரவாதத் தடைச்சட்டம் ) என்று ஒன்று 1979ம் ஆண்டில் தற்காலிகமாகக் கொண்டுவரப்பட்டது. அது கடந்த 35 வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகின்றது. யுத்தம் முடிந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகியும் அது நடைமுறையில் இருந்து வருகின்றது. அதாவது போர் முடிந்துள்ளது, ஜனநாயகம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறும் நாம் எதற்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும்? இவ்வாறான சட்டங்கள் நல்லாட்சிக்கு இடமளிக்கா. எம்நாடு ஒற்றையாட்சிமுறை கொண்ட நாடு என்று அரசியல் யாப்பின் ‘சரத்து 2 குறிப்பிடுகின்றது.
ஒற்றையாட்சி முறைபற்றி ஒரு முக்கிய கருத்தை வௌியிட வேண்டும். 1833ம் ஆண்டு வரை வடகிழக்கு மாகாணங்கள் வேறாகவும், மலைநாட்டு மாகாணங்கள் இன்னொரு கூறாகவும், கீழ்நாட்டு மாகாணங்கள் மற்றொரு கூறாகவும் தென்பகுதி மாகாணங்கள் மேலுமொரு கூறாகவும் நான்கு பிரிவுகளாக இருந்தன. இவை கிட்டத்தட்ட சுதந்திரமான அலகுகளாகத் தம்மிடையே வேறுபாட்டை வைத்துக் கொண்டே இயங்கி வந்தன. வடகிழக்கு மாகாண மக்கள் வேறு மொழி, வேறு மதங்கள், வேறு நடைஉடை பாவனைகளைக் கொண்டிருந்தனர். 1833ம் ஆண்டில் நிர்வாக செயற்திறன் கருதி எல்லா கூறுகளையும் ஆங்கிலேயர்கள் ஒன்றிணைத்தார்கள்.
இதன் காரணத்தினால் பெரும்பான்மை தமிழ் பேசும் மக்களைக் கொண்ட வடகிழக்கு மாகாணங்கள் பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட மற்றைய மாகாணங்களுடன் இணைக்கப்பட்டன. அந்த இணைப்பின் நிமித்தம் தாமாக சுயாதீனமாக இயங்கி வந்த மக்கட் கூட்டம் மற்றையவருடன் சேர்த்துப் பார்த்தபோது தமது சுயாதீனத்தையும் பெரும்பான்மைத் தன்மைகளையுந் தொலைத்து விட்டவர்களாகவே தென்பட்டார்கள். மற்றைய ஏழு மாகாணங்கள் சேர்ந்து இயற்றும் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டிய கட்டாயம் அவர்கள் மீது திணிக்கப்பட்டது. வடகிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்கள் மற்றைய மாகாணங்களுடன் சேர்க்கப்பட்டபோது முழு நாட்டின் சிறுபான்னையினர் ஆகினர். இரு மாகாணங்களில் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்கள் ஏழு மாகாணப் பெரும்பான்மையினருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டதால் அந்த வடகிழக்குப் பெரும்பான்மையினர் நாட்டில் சிறுபான்னையினர் ஆகினர். இதனை வலியுறுத்துவதாகவே ஒற்றையாட்சி அரசியல் யாப்பு அமைந்தது.
வடகிழக்கு மாகாணங்களின் தனித்துவம் பேணப்படவில்லை. பௌத்தம், சிங்களம் ஆகியவற்றிற்கான முதன்மைத்துவத்தின் காரணமாக அரசியல் யாப்பின் ஒற்றையாட்சித்தன்மை தமிழ்ப்பேசும் மற்றைய மத மக்களை இரண்டாந்தரப் பிரஜைகள் ஆக்கிவிட்டன. ஆகவே அரசியல் யாப்பின் ஒற்றையாட்சித்தன்மை நல்லாட்சிக்கு வித்திடவில்லை.
13வது திருத்தச் சட்டம் மாகாணங்களுக்கு ஒரு கையால் கொடுத்து மற்றக்கையால் திருப்பி எடுப்பதாவே அமைந்துள்ளது. மாகாணங்களுக்கு அதிகாரங்களைக் கொடுப்பது போல் கொடுத்து ஆளுநர் ஊடாக மத்திய அரசாங்கம் கட்டுப்பாடுகளை, அடக்கியாளும் அதிகாரங்களைத் தன்வசம் வைத்துக் கொண்டுள்ளது. இதுவும் வடகிழக்கு மாகாண மக்களைப் பொறுத்த வரையில் நல்லாட்சிக்கு வித்திடுவதாக இல்லை.
ஆகவே இப்படியான கட்டமைப்புக்களின் மத்தியில் நல்லாட்சியை உருவாக்க முடியுமா அதற்கான மக்களின் வாய்ப்புக்கள் என்ன என்பது தான் நாங்கள் இறுதியாக ஆராய வேண்டிய விடயம்.
வடமாகாணத்தில் தமிழ்ப்பேசும் மக்களிடையே தமிழில் பேசுவதால் மக்கள் என்ற சொல்லுக்குத் தமிழ்ப் பேசும் மக்கள் என்ற அர்த்தமே பொருத்தம் எனக் கணிக்கின்றேன். எனவே நல்லாட்சியுடனான புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கிக் கொள்ளுவதற்கு தற்போது நிலவுகின்ற கட்டமைப்புக்குள் தமிழ்ப் பேசும் மக்களுக்கு இருக்கும் வசதி வாய்ப்புக்களையே நான் இனி ஆராய வேண்டியிருக்கின்றது.
ஒற்றையாட்சி, பௌத்தத்திற்கு முதலிடம், சிங்கள மொழிக்கு முதலிடம், பயங்கரவாதத் தடைச் சட்டம், 13வது திருத்தச் சட்டம் என்று பலவாறான கட்டமைப்புக் குறைபாடுகளினிடையே தான் தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்க்கை இலங்கையில் நடைபெற்று வருகின்றது. இப்பேர்ப்பட்ட கட்டமைப்புக் குறைபாடுகள் எமது தமிழ்ப் பேசும் மக்களுக்கு விமோசனத்தை அளிக்காது நல்லாட்சியை உறுதிப்படுத்தாது என்பதே எனது வாதம்.
நல்லாட்சிக்கான முதல் அலகு மக்கள் ஒப்புதலுடன் ஆட்சி நடக்க வேண்டும் என்பது. 1972ம் ஆண்டின் குடியரசு அரசியல் யாப்பு இலங்கைத் தமிழ்ப்பேசும் மக்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்படவில்லை. அதாவது தமிழ்ப்பேசும் மக்களின் பங்கு பற்றலுடன் அரசியல் யாப்பு அமைக்கப்பெறவில்லை. தமிழ்ப் பேசும் மக்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற மக்கட் தலைவர்களின் பங்கு பற்றல் இல்லாமலேதான் அரசாங்கம் நடை பெற்று வருகின்றது.
மூன்றாவது சட்ட மேலாட்சி பற்றியது. பயங்கரவாதத் தடைச் சட்டம் போர் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து வலுவில் வைத்திருப்பது சட்ட மேலாட்சியைத் தடை செய்கின்றது. வடகிழக்கு மாகாண மக்களின் கருத்தறியாமல் பங்குபற்றல் இல்லாமல் 13வது திருத்தச் சட்டத்தின் சட்ட ஏற்பாடுகளுக்கு மாறாக பொலிஸ் அதிகாரங்களைக் கொடுக்காமலும் மத்திய மாகாணம் அரசாங்கம் நடந்து கொள்வது வடகிழக்கு மாகாணங்களில் சட்ட மேலாட்சியை உறுதிப்படுத்துவதாக அமையவில்லை.
வடமாகாணத்தில் ஒரு மாகாண அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளது. அது தனது மனதுக்குகந்த விதத்தில், அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விதத்தில்,மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் ஆட்சியை நடத்த இடமளிக்கப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றே பதிலளிக்க வேண்டும். ஆகவே சுதந்திரமற்ற ஒரு அரசாங்கத்தினால் எந்த அளவுக்குப் பதிலளிக்கும் பாங்கை உத்தரவாதப்படுத்த முடியும்?எம்மாகாண ஆட்சியைப் பொறுத்த வரையில் நாங்கள் வௌிப்படைத் தன்மையை வலியுறுத்தியே வருகின்றோம். ஆனால் காணிகளையும், வீடுகளையும் மக்களுக்கு பெற்றுத் தருவதில் மத்திய அரசாங்கத்தினதும், மத்திய அரசாங்க அமைச்சர்களினதும் உள்ளீடுகள் அவ்வாறான வௌிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தவதாக அமையவில்லை. அரசாங்கம் மாறியும் சில அலுவலர்கள் மாகாண மக்களின் பிரதிநிதிகளைப் புறக்கணித்து மத்தியின் மதிப்பற்ற மந்திரிமார்களின் அல்லது முன்னைய மந்திரிமார்களின் வலியுறுத்தல்களுக்கே வளைந்து கொடுப்பவர்களாகத் தென்படுகின்றார்கள்.
சமாந்தரமான இரு ஆட்சிகளை எமது அரசியல் யாப்பு உறுதி செய்வதன் மூலம் பொறுப்புக் கூறுந்தன்மையை இருசாரரரும் புறக்கணிக்கும் விதத்தில் ஆட்சி நடைபெற இடமளித்துள்ளது. நல்லாட்சிக்குப் புறம்பான விதத்தில் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டும் விதத்தில் அரசியல் கட்டமைப்பு அமைந்துள்ளதை நாங்கள் யாவரும் நோக்க வேண்டும்.
நடுநிலையான ஆட்சியும் மக்களை உள்ளடக்கியதான ஆட்சியும் கூட எமது கட்டமைப்புக்களின் நிமித்தம் பாதிப்படைந்துள்ளன. பௌத்தமும், சிங்கள மொழியும் கூடிய மதிப்புப் பெற்றால் மற்றைய மதங்களும் மொழிகளும் உள்ளடங்காது வௌியில் நிற்கின்றன என்றுதானே அர்த்தம்? பௌத்தத்திற்கும் சிங்கள மொழிக்கும் முதலிடம் வழங்க வேண்டிய நீதித் துறையினரிடம் இருந்து எவ்வாறு நடுநிலைமையை எதிர்பார்க்க முடியும்? அண்மையில் எமது பிரதம நீதியரசர் திரு ஸ்ரீபவன் அவர்கள் மகாநாயக்க தேரர்களிடம் இருந்து ஆசி பெற்று வந்ததாக அறிய வந்தது. ஒரு புத்த விகாரைக்குப் போய் வந்ததில் பிழையில்லை. ஒரு புத்த பிக்குவை அவர் இல்லத்திற்கு வரவழைத்து புத்த மதக் கொள்கைகளைக் கேட்டறிவதில் பிழையில்லை. ஆனால் மகாநாயக்க தேரர்களிடம் ஆசி வேண்டி பௌத்தர் அல்லாத பிரதம நீதியரசர் ஒருவர் செல்வது அவர் அரசியல் யாப்பின் 9வது ஷரத்துக்குக் கட்டுப்பட்டுள்ளார் என்ற உண்மையையே வலியுறுத்துகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply