பிரான்சில் 148 பேருடன் விழுந்து நொறுங்கிய ஜெர்மன் விமானம் மோசமான வானிலையால் மீட்புப் பணிகளில் சிக்கல்

பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன் விமானத்தின் சிதறல்களை மீட்கும் பணியில் மோசமான வானிலை காரணமாக சிக்கல் நீடிக்கிறது. விமானத்தில் சென்ற பயணிகள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று விமான போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் ஜெர்மனி நாட்டின் ‘ஏ320’ ஏர் பஸ் வகை விமானம் செவ்வாய்க்கிழமை விழுந்து நொறுங்கியது. ஆல்ப்ஸ் மலைப் பகுதிக்கு உட்பட்ட 4 ஏக்கர் பரப்பளவில் விமானத்தின் சிதறல்கள் கண்டெடுக்கப்பட்டன.

கருப்புப் பெட்டி மீட்பு

மோசமான வானிலை காரணமாக பாகங்களை மீட்பதில் சிக்கலான சூழல் நிலவுவதாக பிரான்ஸ் மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ள நிலையில், விமானத்தில் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த மலைப் பகுதி அடர்த்தியானதாகவும் கடும் பனிப்பொழிவு நிலவுவதாலும் தேடும் பணி மிகவும் சவாலானதாக இருப்பதாக பிரான்ஸ் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினர் பார்சிலோனா, டசல்டார்ப் விமான நிலையங்களில் தகவல்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

உயிரிழந்தவர்களில் 16 பேர் மாணவர்கள்

விமானத்தில் சிக்கிய 148 பயணிகளில் 16 பள்ளி மாணவர்களும் அடக்கம் என்று தெரியவந்துள்ளது. அவர்கள் பள்ளி சுற்றுலாவுக்கு சென்று திரும்பி கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் சென்றவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படும் நிலையில் இந்த மோசமான விபத்து ஜெர்மன் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply