தமிழர்களிற்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை சொந்த நலன்களிற்காக துஸ்பிரயோகம் செய்தவர்கள் தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஒற்றுமை பற்றி பேசுவது கேலிக்குரியதாகும். தமிழர் மேம்பாட்டு பேரவை விசனம்
வன்னி மாவட்டம் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். இந்நிலையில் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சுவீகரிக்கப்பட்டு முஸ்லிம் மக்களுக்கு வழங்குவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். இந்நிலையில் தமிழ் மக்களின் இன ஒற்றுமை பற்றி அமைச்சர் றிசாட் பதியுதீன் பேசுவது நகைப்பிற்குரியதாகும் என்பதுடன் இத்தகைய கருத்தினை வெளியிடுவதற்கு தான் தகுதியானவரா என தனது மனச்சாட்சியிடம் கேட்டுக்கொள்ளவேண்டும் என தமிழர் மேம்பாட்டு பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதுடன் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளோம். ஆனாலும் சில விசமிகள் வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட துன்பகரமான சம்பவத்தை மீளவும் நினைவூட்டி வளரும் சிறார்கள் மீது இனவாதத்தை வளர்க்க முற்படுவது எம்மை வேதனைக்குள்ளாக்கியிருப்பதுடன் மீண்டும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாட்டை தோற்றுவித்துவிடும் என்ற அச்சத்தினையும் உருவாக்கியுள்ளது.
ஏனெனில் முஸ்லிம் இளைஞர்கள் அரச இயந்திர கட்டமைப்பில் பணியில் ஈடுபட்ட வேளை ஏராளமான தமிழ் மக்களை கடமையின் பெயரால் கொன்று குவித்ததை முஸ்லிம் தலைவர்கள் நினைவில் கொள்ளவேண்டியது அவசியமாகும். இதனை மறந்து மூர்க்கத்தனமாக தங்களின் அரசியல் இலாபங்களிற்காக இனகுரோதத்தை வளர்ப்பார்கள் ஆனால் அதன் பின்னால் ஏற்படும் விளைவுகளுக்கு முஸ்லிம் தலைவர்களே முழுப்பொறுப்பு ஏற்கவேண்டும்.
ஆகவே இவ்வாறான இனகுரோத வளர்ப்பு செயற்பாடானது இருஇனங்களுக்கிடையேயான பரஸ்பர நல்லுறவை பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதுடன் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் குறைந்தபட்சம் இஸ்லாமிய மார்க்கத்தின்பால் நடந்து கொள்ள முற்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுகின்றோம். அவ்வாறு இல்லாமல் நடைமுறையில் ஒன்று மேடையில் பேசுவது இன்னொன்றாக அமைவது மனிதநாகரிகத்திற்கு பொருத்தமானதாக அமையாது.
அறுபது வருடகால யுத்தத்தில் சிக்கி உயிர்களை தொலைத்த இலட்சக்கணக்கான மக்கள் ஒருபுறமும் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள் இன்னொருபுறமும் வாழும் நிலையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை கபளீகரம் செய்து மீள் குடியேற்றம் என்ற போர்வையிலும் கைத்தொழில் அபிவிருத்தி என்ற போர்வையிலும் தமிழ் மக்களின் இனப்பரம்பலை சிதைக்கும் செயற்றிட்டங்களில் அமைச்சர் றிசாட் பதியுதீன் உள்ளிட்ட குழுக்கள் ஈடுபட்டு வந்ததை தமிழ் மக்கள் இன்னமும் மறந்துவிடவில்லை.
யுத்தம் முடிவுற்று ஆறு ஆண்டு காலப்பகுதிக்குள் வன்னியில் பாரிய நிலப்பரப்பு தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளதுடன் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வேலைவாய்ப்புக்கள் கூட துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.தமிழ் அரசியல் தலைவர்களை பொறுத்தவரையில் உயர் பாதுகாப்பு வலயங்களிற்கு எதிராக மாத்திரமே குரல் கொடுத்து பழக்கப்பட்டுள்ளனரே அன்றி றிசாட் பதியுதீன் போன்றவர்களால் மேற்கொள்ளப்படும் நாசூக்கான வளக்கொள்ளைகள் தொடர்பாக கண்டுகொள்வதாக இல்லை என்பது அனைவர் மத்தியிலும் ஆழ்ந்த கவலையை உருவாக்கியுள்ளது என்பதுடன் வன்னிமாவட்டங்களின் அபிவிருத்தி குழுக்களால் வழங்கப்படும் வளப்பங்கீட்டிலும் இவ்வாறான பாராபட்சம் நிகழ்ந்து வருவதை ஒவ்வொரு தமிழ் கிராமங்களும் உணரத்தொடங்கியுள்ளன.
அது மாத்திரமன்றி அரச நியமனங்கள் வழங்கும் போதும் அமைச்சர் தனது அதிகாரங்களை பயன்படுத்தி முறையற்ற விதத்தில் பக்கசார்புடன் வழங்கப்பட்டதனை தமிழ் மக்கள் அறிவார்கள் என்பதுடன் ஒரு சில தமிழ் இளைஞ்ஞர்களிற்கு பணத்தினை வாரி இறைத்து தேர்தல் காலங்களில் தன்னை தமிழ் மக்களின் தலைவனாக காட்டும் பசாங்கினையும் கண்டு தமிழ் மக்கள் வெகுண்டெழ தொடங்கியுள்ளனர்.
தகமையுடைய தமிழ் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்க கடந்தகாலங்களில் எந்தவொரு போட்டிப்பரீட்சையோ முறையான நெறிப்படுத்தப்பட்ட நேர்முகத்தேர்வோ இன்றி அரசியல் தலைவர்களின் விருப்பங்களிற்கு அமைவாக நியமனங்கள் வழங்கப்பட்டதன் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வேலைவாய்ப்புக்கள் கூட வன்னி அமைச்சரினால் பறிக்கப்பட்டு தனது சமூகத்தினை சார்ந்தோருக்கு வழங்கப்பட்டுள்ளது எம்மை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஆகவே இவ்வாறான எதெச்சதிகார வலைக்குள் தமிழ் மக்களை சிக்க வைத்துவிட்டு தேர்தல் காலங்கள் நெருங்கும் போது தையல் இயந்திரங்களையும் பாரிய பண மூலதனங்களையும் கொண்டு தமிழ் மக்களை விலைக்கு வாங்கும் வங்குரோத்து அரசியல் நடவடிக்கைகள் குறித்து தமிழ் மக்கள் விழிப்படைய தொடங்கி விட்டனர்.
இந்நிலையில்; அவர்களுக்கு நன்றாகவே தெரியும் விற்கப்படுவது தங்கள் வாக்குரிமை மாத்திரமல்ல தங்கள் எதிர்கால சந்ததியின் இருப்பும் என்பதுமாகும். பாராளமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தன்னை தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையினை நிலைநாட்டுவதாக மேடைகளில் பாசாங்கு செய்வதை வன்மையாக கண்டிப்பதுடன் அவருடைய உண்மை முகத்தினை தமிழர்கள் கிராமங்கள் தோறும் வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply