உலகமே எதிர்பார்க்கும் பரபரப்பு போட்டி ஆஸி – நியூசிலாந்து நாளை பலப்பரீட்சை
11ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டி நாளை அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெறவுள்ளது. ஆறு வாரங்கள் 48 போட்டிகள் மற்றும் 14 அணிகள் பங்கேற்ற 11 ஆவது உலகக் கிண்ண போட்டியில் சம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கு இன்னும் ஒரு ஆட்டம்தான் எஞ்சியுள்ளது. இந்தப் பரபரப்பான பலப்பரீட்சையில் வெல்லப்போவது யார்? என்பதை உலகமே எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறது.அவுஸ்திரேலிய அணி ஏழாவது தடவையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது. இதில் ஆஸி. அணி மூன்று தடவைகள் வெற்றி பெற்று அதிக முறை உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அணியாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. எவரும் எதிர்பார்க்காத வகையில் இம்முறை உலகக் கிண்ணத்தில் தொடர்ந்து எட்டுப் போட்டிகளிலும் வென்ற நியூஸிலாந்து முதல் முறை உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது.
நியூஸிலாந்து அணி ஒக்லாந்தில் நடந்த லீக் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது. இறுதிப் போட்டியில் அதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி யுள்ளது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய ஆதரவாளர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட சுமார் 100,000 பேர் திரளும் மெல்போர்ன் அரங்கில் அவுஸ்திரேலியா வுக்கு எதிராக ஆடுவது நியூஸிலாந்துக்கு சவாலாகவே இருக்கும். தவிர மெல்போர்ன் அரங்கில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னரே நியூஸிலாந்து விளையாடவுள்ளது.
குறிப்பாக நியூஸிலாந்து அணியின் ஆரம்ப பந்து வீச்சாளர்களான டிரென்ட் போல்ட் மற்றும் டிம் சவூதி புதிய பந்தை எப்படி கையாள்வார்கள் என்பதும் அந்த அணியின் வெற்றிக்கு அதிக தாக்கம் செலுத்தும் காரணியாக இருக்கும். சொந்த மண்ணில் குறைவாக சுவிங் ஆகும் ஆடுகளத்திற்கு ஏற்ப பந்துவீசி வந்த இந்த இரு பந்து வீச்சாளர்களும் இறுதிப் போட்டியில் சரியான இடத்திற்கு பந்து வீசுவது கட்டாயமாகும்.
மறுபுறத்தில் மிச்சல் ஜோன்சன் மற்றும் மிச்சல் ஸ்டார்க் ஆகியோர் இந்த தொடர் முழுவதும் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு சவாலாகவே பந்துவீசி வருகிறார். எனவே நியூஸிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் இந்த பந்து வீச்சாளர்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுவது ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை இழக்காமல் இருப்பதற்கு வாய்ப்பாக இருக்கும்.
துடுப்பாட்டத்தில் தொடர் முழுவதும் இரு அணி வீரர்களும் சோபித்துள்ளனர். பிரென்டன் மக்கலம் மற்றும் மார்டின் கப்டில் ஆகியோரது பயப்படாத அதிரடி ஆட்டம் இறுதிப் போட்டியிலும் தொடர்ந்தால் ஆஸி. நான்காவது முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்பை கைவிட வேண்டியதுதான்.
பதற்றமான சூழல்களில் நியூஸிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயற்படுவது அந்த அணியின் பெரிய பலமாக உள்ளது. குறிப்பாக அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் கான் வில்லியம்ஸ¤ம் தென்னாபிரிக்காவுடனான அரையிறுதியில் கிரான்ட் எலியொட்டும் தோல்வியை கண்டுகொண்டே சிக்ஸர் அடித்து வெற்றிபெற்றது. அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.
அவுஸ்திரேலிய அணியில் ஸ்டிவ் ஸ்மித் நிதானமாக ஓட்டங்களை குவித்து வருவதோடு டேவிட் வோனர் மற்றும் கிளென் மெக்ஸ்வெல்லும் அபாயமான வீரர்களாக உள்ளனர்.
எனவே நாளைய உலகக் கிண்ண இறுதிப் போட்டி கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply