சோமாலியாவில் ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்: தூதர் உள்பட 10 பேர் பலி

சோமாலியா தலைநகர் மொகாடிசுவில் மகா அல் – முகாரமா என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்கு அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் திடீரென உள்ளே புகுந்தனர். முன்னதாக, ஓட்டலுக்கு வெளியே கேட்டின் முன்புறம் வெடிகுண்டு நிரப்பிய காரை வெடிக்க செய்தனர். இதற்கிடையே ஓட்டலுக்குள் புகுந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.உடனே, ஓட்டலில் இருந்த வெளிநாட்டு தூதர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மாடிகளில் உள்ள ஜன்னல்கள் வழியாக குதித்து தப்பி ஓடினர். இருந்தும் தீவிரவாதிகளின் தாக்குதலில் 10 பேலி பலியாகினர்.

அவர்களில் சோமாலியாவுக்கான சுவிட்சர்லாந்து தூதர் யூசுப் முகமது இஸ்மாயில் என்பவரும் அடங்குவார். அவரது உடலில் தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டுகள் பெருமளவில் பாய்ந்ததால் ரத்த வெள்ளத்தில் பலியானார்.

ஓட்டலுக்குள் பலரை பிணைக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர். அவர்களை மீட்க அமெரிக்கா பயிற்சி அளித்து வரும் சோமாலியா சிறப்பு அதிரடிப்படை ராணுவ வீரர்கள் புகுந்துள்ளனர்.

அவர்கள் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஓட்டலின் பெரும்பகுதி சோமாலியா சிறப்பு படையின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. அதே நேரத்தில் தீவிரவாதிகள் ஓட்டலின் மேல் மாடிகளை ஆக்கிரமித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

சிறப்பு அதிரடிப் படையினர் மீது துப்பாக்கி சூடும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இருந்தும் ராணுவ வீரர்கள் முன்னேறி வருகின்றனர். விரைவில் ஓட்டலை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பிணைக்கைதிகளை மீட்பர் என தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது யூசுப் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த தாக்குதலுக்கு சோமாலியாவின் அல்ஷபாப் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply