பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் மோடி பேச்சு: காங்கிரஸ் கண்டனம்

பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் மோடி பேசி உள்ளதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. கனடா நாட்டில் டொராண்டோ நகரில் கனடா வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர், முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை மறைமுகமாக சாடினார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில், “நாட்டில் இதற்கு முன்பிருந்தவர்கள் குப்பைகளை சேர்த்து வைத்து விட்டு போய் விட்டார்கள். நாம் அதை அகற்றுவோம்” என குறிப்பிட்டார்.         மேலும், “ முன்பு நாடு, ‘ஊழல் இந்தியா’ என்று அறியப்பட்டிருந்தது. ஆனால் நாங்கள் அதை ‘திறன் வாய்ந்த இந்தியா’வாக அறியச் செய்ய விரும்புகிறோம்” எனவும் கூறினார்.

மோடியின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆனந்த் சர்மா கூறியதாவது:-

அன்னிய மண்ணில், குறிப்பாக ஜெர்மனியிலும், கனடாவில் பிரதமர் பேசி இருப்பது மோசமானதாகும். 2014 தேர்தல் பிரசாரத்தைத்தான் அவர் இன்னும் தொடர்கிறார் என்பது தெளிவு. அவர் அன்னிய மண்ணில், தனக்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்களை, தற்போதைய எதிர்க்கட்சியினரை அவதூறாக பேசி உள்ளார். இதுபோன்று இந்தியாவின் எந்தவொரு பிரதமரும் ஒருபோதும் செய்தது இல்லை.          நாடு ஊழலால் அறியப்பட்டுள்ளது என்று அவர் கூறி இருக்கிறார். அவர் தனது பதவியின் கண்ணியத்தை குறைக்கிற வகையில்தான் இப்படி பேசி உள்ளார்.

மோடி ஒரு வலுவான பொருளாதாரத்தை, எழுச்சிமிக்க இந்தியாவைத்தான் மரபுரிமையாக எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதை நினைவுபடுத்த வேண்டும். இந்தியாவை வளமான நாடாக, வலிமை வாய்ந்த நாடாக, மக்கள் பலம் கொண்ட நாடாக உலகம் இப்போதுதான் முதல் முறையாக அங்கீகரித்துள்ளது என்று மோடி நினைத்தால், அவருக்கு தவறான தகவல் தரப்பட்டுள்ளது அல்லது அவர் அதீத மாயையில் இருக்கிறார் என்றுதான் பொருள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply