வவுனியா மாவட்ட நிவாரண கிராமங்களின் பணிகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை : றிஷாட் பதியுதீன்
வவுனியா மாவட்டம் மெனிக்பாமில் உருவாக்கப்பட்டுவரும் நான்கு நிவாரணக் கிராமங்களின் பணிகளை இம்மாத இறுதிக்குள் பூர்த்தியாக்கும்படி மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மோதல்கள் காரணமாக உள்ளூரில் இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் வசித்துவரும் 10 ஆயிரம் பேரை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னதாக அந்நிவாரணக் கிராமங்களில் குடியமர்த்துவதற்காகவே இதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
வன்னியில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை தந்திருக்கும் சிவிலியன்களுள் 42 ஆயிரம் பேர் வவுனியாவின் பம்பைமடு, நெளுக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள நிவாரணக் கிராமங்களில் பாதுகாப்பாக குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களை மேலும் பாதுகாப்பாக குடியமர்த்துவதற்காக செட்டிக்குளம் மெனிக்பாமில் நிவாரணக் கிராமங்கள் உருவாக்கப்பட்டிருப்பதுடன் மேலும் மூன்று கிராமங்கள் உரவாக்கப்பட்டு வருகின்றன.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரில் முதற்கட்டமாக 10 ஆயிரம் பேரை மேற்படி நிவாரணக் கிராமங்களுக்கு இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக குடியமர்த்த அமைச்சர் றிசாட் தீர்மானித்துள்ளார்.
இதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்கில் நேற்று அமைச்சர் றிசாட் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அரசாங்க அதிபர், வவுனியா இராணுவ முகாமின் உயர் அதிகாரிகள், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை, நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி சபை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
செட்டிக்குளத்தில் உருவாக்கப்பட்டு வரும் நிவாரணக் கிராமங்களின் பணிகளை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் இதன்போது உயர் அதிகாரிகளுக்கு பணித்தார். தற்போது 5 ஆயிரம் பேர் மெனிக்பாம் முகாம்களில் வசித்து வருவதாகவும் அமைச்சர் றிசாட் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply