காபூலில் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 இந்தியர்கள் உள்பட 14 பேர் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் அட்டூழியத்தை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாட்டு படைகள் முகாமிட்டுள்ளன. தீவிரவாதிகள் முகாம்கள் மீது போர் விமானங்கள் குண்டு வீசி அழித்து வருகின்றன. இதனால் தீவிரவாதிகள் அப்பாவிகளையும், வெளி நாட்டினரையும் குறிவைத்து தாக்கி பதிலடி கொடுக்கிறார்கள்.இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பார்க் பேலஸ் நட்சத்திர ஓட்டலுக்குள் புகுந்தனர். அங்கு தங்கி இருந்த வெளிநாட்டினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். மேலும் பல வெளிநாட்டினரை பணய கைதிகளாக பிடித்து வைத்தனர். உடனே ராணுவ வீரர்களும், போலீசாரும் அங்கு விரைந்தனர். ஓட்டலை சுற்றி வளைத்த அவர்கள் தீவிரவாதிகளை நோக்கி எதிர்தாக்குதல் நடத்தினார்கள்.
நேற்று இரவு 8.30 மணிக்கு தொடங்கி விடிய விடிய இருதரப்புக்கும் இடையே 7 மணி நேரத்துக்கும் மேலாக துப்பாக்கி சண்டை நீடித்தது. தீவிரவாதிகள் வெடிகுண்டுகளையும் வெடிக்கச் செய்தனர். அந்த ஓட்டலின் விருந்தினர் விடுதியில் 6 இந்தியர்கள் தங்கி இருந்தனர். அவர்களில் 4 பேர் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியானார்கள்.
இதேபோல் ஓட்டலின் மற்ற இடங்களில் நடந்த தாக்குதலில் வெளிநாடுகளைச் சேர்ந்த 11 பேர் பலியானார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. இதற்கிடையே ராணுவம் நடத்திய எதிர்தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெரியவில்லை. மேலும் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அந்த ஓட்டலில் ஏராளமானோர் சிக்கி இருந்தனர். கடும் துப்பாக்கி சண்டைக்குப் பின் 54 பேரை பாதுகாப்பு படையினர் மீட்டனர். இந்த ஓட்டலில் வெளிநாட்டினர்தான் அதிகம் தங்குவார்கள். இதுதவிர வெளிநாட்டு உதவி நிறுவன பணியாளர்களும் தங்கி இருந்தனர்.
சம்பவம் நடந்த போது ஆப்கானிஸ்தான் நாட்டு பாரம்பரிய இசை கலைஞர் அல்டாப் உசைனின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. இதை வெளி நாட்டினர் ரசித்துக் கொண்டு இருந்தனர். அப்போதுதான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்த தொடங்கினர். இன்று அதிகாலை தாக்குதல் முடிந்ததும் அந்த ஓட்டலில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். ஓட்டலுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் ஆப்கானிஸ்தானில் நேற்று சுற்றுப்பயணம் செய்து விட்டு பாகிஸ்தான் திரும்பினார். அவர் ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஆதரிப்பதாகவும் ஆப்கானிஸ்தானின் எதிரிகள் பாகிஸ்தானுக்கும் எதிரிகள் என நேற்று பிரகடனம் செய்தார்.
இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பலியான இந்தியர்கள் விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக ஆப்கானிஸ்தானில் மத்திய அரசு தொடர்பு கொண்டு பேசி வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply