சம்பூர் காணி விவகாரம் – ஜனாதிபதியின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை
சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள காணியொன்றை தனியார் நிறுவனம் ஒன்றின் தொழிற்சாலைக்காக வழங்குவதற்கு கடந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தொழிற்சாலையை அமைக்கவிருந்த குறித்த தனியார் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவை ஆராய்ந்தபோதே நீதிமன்றம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் 2012-ம் ஆண்டு தமக்கு தொழிற்சாலை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியிருந்ததாக அந்த நிறுவனம் மனுவில் கூறியுள்ளது.
தொழிற்சாலை அமைக்கும் பணிகளுக்காக சுமார் 4 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய வர்த்தமானி அறிவித்தல் காரணமாக தமக்கு பெருநட்டம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டத்துக்கு முரணாக குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாகவும் அந்த அறிவித்தலை இரத்துசெய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.
குறித்த மனுவை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் ஜனாதிபதியின் அறிவித்தலுக்கு வரும் 21-ம் திகதி வரை தடை விதித்துள்ள நீதிமன்றம் அன்றைய தினம் நீதிமன்றத்துக்கு விளக்கம் அளிக்குமாறு அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது என பிபிசி செய்தி வௌியிட்டுள்ளது.
சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள காணிகளை மக்களின் மீள்குடியேற்றத்திற்காக திருப்பிக் கொடுப்பதாக அண்மையில் அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply