புங்குடுதீவு மாணவி படுகொலையாளிகளுக்கு மக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றவேண்டும் :பிரதியமைச்சர் விஜயகலா
புங்குடுதீவு மாணவி மீதான பாலியல் வல்லுறவு படுகொலை ஆகியவற்றுடன் தொடர்புடைய பத்துப் பேருக்கும் பொது மக்கள் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் ஆவேசமாக வேண்டுகோள் விடுத்தார்.மாணவியின் படுகொலை தொடர்பில் குடாநாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலையின் பின்னணியின் ஆயுதக்குழுவே செயற்பட்டுவருகிறது.இதனைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாரும் அசமந்தப்போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். புலிகளின் காலத்தில் இத்தகைய பாலியல் வல்லுறுவுகள் இடம்பெற்றதில்லை. அப்படி நடந்தால் 24 மணித்தியாலத்தில் தண்டனை வழங்கிவிடுவர் என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு கையில் கறுப்பட்டி அணிந்த நிலையில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
புங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது தொடர்பில் இந்தப் பாராளுமன்றத்தில் எனது துக்கத்தை வெளிப்படுத்துகிறேன்.
மேற்படி மாணவி படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (நேற்றுடன்) 7 தினங்கள் ஆகின்றன. இதனால் இன்று வடமாகாணம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. அதுமட்டுமல்லாது யாழ்ப்பாணத்தின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி கடத்தப்பட்ட மறுதினம் அதிகாலை 6.00 மணியளவில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாருக்கு அறிவித்த போதும் பொலிஸார் 9.00 மணிக்கே வருகை தந்தனர். முன்னதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடச்சென்ற தாயார் நான்கு மணித்தியாலங்களாக விசாரணைக்கு உற்படுத்தப்பட்டுள்ளார். இது தேவையற்ற விடயமாகும். அதுமாத்திரமின்றி குறித்த மாணவி சிநேகிதனுடன் சென்றிருக்கலாம் எனக் கூறியுள்ளதுடன் மறுநாள் வந்து முறையிடுமாறு பொறுப்பின்றிய நிலையில் அசட்டையீனமாக செயற்பட்டுள்ளனர்.
மாணவி மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலை ஆகியவற்றுடன் 10 பேருக்கு தொடர்புள்ளது. இதில் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரும் அடங்குகிறார்.
கடந்த காலங்களிலும் இப்பிரதேசங்களில் தொடர்ச்சியான பாலியல் வல்லுறவுகள், படுகொலைகள், சிறுமிகளை பாலியல் வல்லறவுக்குட்படுத்தல் போன்ற குற்றச்செயல்கள் இடம்பெற்றன. அங்கு இயங்கி வருகின்ற ஆயுதக்குழுக்களாலேயே இந்தக் குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்பட்டன. சிறுமிகளை, யுவதிகளை பெண்களை படுகொலை செய்து கிணறுகளில் போட்டு புதைத்ததும் இந்த ஆயுதக்குழுக்களே ஆகும்.
இன்று வடக்கில் குழப்பரமான நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அங்கு இயங்குகின்ற ஆயுதக்குழுவே இருக்கின்றது. இதனைக்கட்டுப்படுத்துவதில் பொலிஸாரும் அசட்டையாக இருக்கின்றனர்.
மேற்படி ஆயுதக்குழுக்கள் இன்று பலவந்தமாக பொது மக்களுக்கு சொந்தமான வீடுகளையும் உடைமைகளையும் பறித்து அலுவலகங்களை நடத்தி வருகின்றனர். எனவே வடக்கில் இருக்கின்ற ஆயுதக்குழுக்களை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சகலரையும் பொதுமக்களின் முன்னிலையில் மரணதண்டனைக்கு உட்படுத்தவேண்டும்.மேலும் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தவறிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் உடனடியாக பதவி விலக்கவேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply