வித்தியா கொலைவிசாரணை சி.ஐ.டி.குழு யாழ்.விரைவு
யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புங்குடுதீவு பிரதேசத்தில் உயர்தர வகுப்பு மாணவி வித்தியா பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான விஷேட விசாரணைகளுக்காக நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் கடத்தல் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பில் விசாரணை செய்யும் சிறப்பு குழுவொன்று யாழ்.புங்குடு தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.
பொலிஸ் பேச்சாளர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
மாணவி வித்தியா, பலாத்காரம் செய்யப்பட்டமை, படுகொலை செய்யப்பட்டமை ஆகிய விடயங்களுடன் சந்தேக நபர்கள் குறித்த பின்னணி தொடர்பாகவும் இந்த குழு விசாரணை செய்யப்படவுள்ளது.
அதனை விட எவரேனும் சந்தேக நபர்களை காப்பாற்ற முனைந்தனரா, அவர்களுக்கு தெரிந்துகொண்டே அடைக்கலம் கொடுத்தனாரா உள்ளிட்ட அனைத்து விடயங்களும் உள்ளடங்கியதாக பரந்துபட்ட வகையில் இந்த விசாரணை அமையும் என்றார்.
இதனிடையே நேற்று முன் தினம் வெள்ளவத்தை, ஸ்டேஷன் வீதி விடுதியொன்றுக்குள் வைத்து கைது செய்யப்பட்ட மாணவி வித்தியா படுகொலை சம்பவத்தின் ஒன்பதாவது சந்தேக நபர் நேற்று அதிகாலை 2.00 மணிக்கு வெள்ளவத்தை பொலிஸாரினால் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த விஷேட பொலிஸ் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ராஜசிங்கம் சசிகுமார் என்ற குறித்த சந்தேக நபர் சுவிட்ஸ்ர்லாந்துக்கு தப்பிச் செல்லும் நோக்கில் வெள்ளவத்தை விடுதியில் தங்கியிருந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ள தாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந் நிலையில் சந்தேக நபர் சுவிசர்லாந்தில் இருந்து இங்கு வந்துள்ள நிலையில் இந்த கொலையின் பின்னர் அவர் மீண்டும் சுவிசர்லாந்துக்கு தப்பிச் செல்லவே கொழும்பு வெள்ளவத்தைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஞாயிறன்று குறிகட்டுவான் பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கொழும்புக்கு வர முற்பட்ட போது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளார். காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் போது வைத்தியசாலையில் இருந்து சிலரின் ஒத்துழைப்புடன் ஒருவாறு தப்பியுள்ள இந்த சந்தேக நபர் கொழும்புக்கு வந்து வெள்ளவத்தையில் விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளார். இதன் போதே வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதய குமார வுட்லர் தலமைமையிலான பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட ஒன்பதாவது சந்தேக நபர் வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கொன்டு செல்லப்பட்டுள்ள நிலையில் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கட்டுப்பாட்டில் வைத்து அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந் நிலையில் நேற்றைய தினம் யாழ். நீதிமன்றில் சந்தேக நபரை ஆஜர்படுத்திய பொலிஸார் விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
இந் நிலையில் யாழ்ப்பாணம் சென்றுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பிலான அறிக்கையினை ஆய்வு செய்த பின்னர் தமது நடவ்டிக்கைகளை இன்று முதல் ஆரம்பிப்பர் என தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையிலேயே சந்தேக நபர்களை பாதுகாக்க முனைந்தவர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply