ஜூன் 8–ந்தேதி முதல் 6 நாட்கள் பிரதமர் மோடி மீண்டும் வெளிநாடு பயணம்

பிரதமர் மோடி பதவி ஏற்ற பின்பு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பதவி ஏற்ற ஒரு ஆண்டில் பூடான், பிரேசில், நேபாளம், ஜப்பான், அமெரிக்கா, மியான்மர், ஆஸ்திரேலியா, இலங்கை பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, சீனா, மங்கோலியா, தென்கொரியா என 18 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அந்த நாடுகளுடனான இந்தியாவின் உறவை மேம்படுத்துவது, தொழில்–வர்த்தக ஒப்பந்தங்கள், தீவிரவாத பிரச்சினைகள் பற்றி அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். இந்தியாவில் தொழில் தொடங்க வெளிநாட்டு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இலங்கை, நேபாளம், மங்கோலியா போன்ற நாடுகளுக்கு இந்தியா சார்பில் கடன் உதவி, முதலீடு போன்ற சலுகைகள் வழங்குவதாகவும் மோடி அறிவித்தார்.

ஆனால் பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடு செல்வதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறைகூறி வருகின்றன. பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

மராட்டியத்தில் பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்யும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். இந்த நேரத்தில் பிரதமர் மோடி மங்கோலியாவுக்கு கடன் உதவி அளித்து இருப்பது தேவையா? மராட்டியர்களை விட மங்கோலியர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று சிவசேனா கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தென் கொரியா சுற்றுப் பயணத்தை முடித்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடி மீண்டும் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 7 நாடுகளில் 6 நாட்கள் சுற்றுப் பயணம் செய்கிறார்.

அடுத்த மாதம் (ஜூன்) 8–ந்தேதி முதல் 6 நாட்கள் வங்காள தேசத்தில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் செய்கிறார். இந்திய– வங்காளதேச எல்லை ஒப்பந்தம் தொடர்பான உடன் படிக்கையில் கையெழுத்திடுகிறார்.

அதன் பிறகு ஜூலை மாதம் 9–ந்தேதி ரஷியா செல்கிறார். ரஷியாவின் உபா நகரில் 6 நாடுகள் பங்கு பெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

அங்கு 2 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 நாடுகளில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் செய்கிறார்.

பிரதமரின் சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை மத்திய வெளியுறவுத்துறை செய்து வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply