ரபேல் போர் விமானங்கள் கொள்முதல்: மோடி அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்
ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் அரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை சேர்த்துக்கொள்ளாததற்கு, மோடி அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம், பிரான்ஸ் நாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டபோது, அந்த நாட்டின் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேயை சந்தித்து பேசினார். அப்போது, அந்த நாட்டிடம் இருந்து, நடுத்தரமானதும், பன்முக பயன்பாடு கொண்டதுமான 36 போர் விமானங்களை, பறக்கும் நிலையில் வாங்குவதாக தெரிவித்தார்.
6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.37 ஆயிரத்து 800 கோடி) மதிப்பிலான இந்த ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி பல்வேறு சந்தேகங்களை எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி, “பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக நிதி அமைச்சகம், ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் ஆகியவற்றுடன் கலந்தாலோசிக்கப்பட்டதா?” என கேள்வி எழுப்பினார்.
முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, ரபேல் போர் விமானங்களை வாங்க திட்டமிட்டபோது பல்வேறு காரணங்களை கூறி, பாரதீய ஜனதா தலைவர்கள் யஷ்வந்த் சின்கா, ஜஸ்வந்த் சிங் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர் என அவர் குறிப்பிட்டார்.
ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சிலை புறக்கணித்து விட்டு, பிரதமரோ, ராணுவ மந்திரியோ, பாதுகாப்பு படைகளோ எந்த கொள்முதலையும் செய்ய முடியாது எனவும் அவர் கூறினார்.
மேலும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, பறக்கும் நிலையில் 18 விமானங்களை டசால்ட் ரபேல் நிறுவனம் சப்ளை செய்து விட்டு, 108 விமானங்களை உற்பத்தி செய்வதில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு தொழில் நுட்பத்தை தந்து, அந்த நிறுவனமே உற்பத்தி செய்ய வேண்டும் என்று பேசப்பட்டது. ஆனால் அந்த நிறுவனம், தொழில் நுட்பத்தை தர தயாராக இல்லை எனவும் ஏ.கே.அந்தோணி குறிப்பிட்டார்.
இந்த நிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தை முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளருமான ஆனந்த் சர்மா நேற்று எழுப்பினார். டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் பேசுகையில் இதுபற்றி கூறியதாவது:-
முந்தைய ஒப்பந்தத்தின்படி, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம்தான், பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து தொழில் நுட்பத்தை பெற்று 108 போர் விமானங்களை உற்பத்தி செய்யவேண்டும்.
அப்படி இருக்கும்போது, இந்திய-பிரான்ஸ் அரசுகளிடையேயான ஒப்பந்தத்தில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை ஏன் சேர்த்துக்கொள்ளவில்லை?
எந்த தனியார் நிறுவனம், இந்த ஒப்பந்தத்தினுள் கொண்டு வரப்பட்டுள்ளது? இந்த விமான பேரத்தில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை சேர்க்காதது, நாட்டு நலனின் அடிப்படையிலா?
இந்தக் கேள்விகளை நாங்கள் எழுப்புகிறோம். இதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply