பொதுத் தேர்தலில் பலமான கட்சியாக ஐ.தே.க. களமிறங்கும்
பாராளுமன்ற தேர்தலில் பலமான கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்கும். பெரும்பான்மை வாக்குகளுடன் மாபெரும் வெற்றியை பெற்றே தீரும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இந்த தேர்தலில் மக்கள் ஆணை எந்த தரப்பினர் பக்கம் உள்ளதென்பது தெரியவரும். நீதியான தேர்தலை நடத்தி வெற்றியை உறுதி செய்வோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கலைக்கப்பட்டது. இதன்படி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தயார் நிலை தொடர்பில் வினவிய போதே முன்னாள் நிதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஜனவரி 8 ஆம் திகதி சர்வாதிகார போக்குடன் கூடிய ராஜபக் ஷ குடும்ப ஆட்சிக்கு எதிராக ஜனநாயக புரட்சியை முன்னெடுத்து மாபெரும் வெற்றியை பெற்றுக்கொண்டோம். எனவே எமது முதல் கட்ட புரட்சியை வெற்றி கொண்டோம்.
இந்நிலையில் இரண்டாம் கட்ட புரட்சிக்கு நாம் தற்போது தயாராக உள்ளோம். இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட வர்த்தமானி அறிக்கையின் மூலமாக பாராளுமன்றத்தை கலைத்துவிட்டார்.
எனவே ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக தயாராக உள்ளது. எனவே பலமான கட்சியாக நாம் தேர்தலில் களமிறங்கி மாபெரும் வெற்றியை பெற்று ஆட்சிப்பீடமேறுவோம்.
நாட்டில் இதுவரை காலம் எந்தவொரு அரசாங்கமும் செய்யாதவைகளை 100 நாள்களில் சிறுபான்மை அரசாங்கமாக நிறைவேற்றியுள்ளோம். எவராலும் மாற்ற முடியாதென்று கூறிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை திருத்தியமைத்தோம்.
அதுபோன்று பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்ததுடன், அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் குறைத்து மக்களுக்கு சலுகை வழங்கினோம். எனவே தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, பெரும்பான்மை அரசாங்கமாக எமக்கு மக்கள் ஆணை வழங்கினால் பொருளாதார ரீதியாக நாட்டை கட்டியெழுப்புவோம்.
எனவே இந்த தேர்தலில் மக்கள் ஆணை எந்த தரப்பினர் பக்கம் உள்ளதென்பது தெரியவரும். எவ்வாறாயினும் நீதியான தேர்தலை நடத்திக் காட்டி எமது வெற்றியை உறுதி செய்வோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply