நாட்டை வளமாக்கி இளைஞர், யுவதிகளுக்கு ஒளியூட்டுவதே எனது இலக்கு பிரதமர்
பிரதமர் பதவியை வைத்துக் கொண்டு சுகபோகம் அனுபவிக்க வரவில்லை. நாட்டை வளமுள்ளதாக்கி இளைஞர், யுவதிகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை கட்டி எழுப்புவதே தனது அரசியல் பயணத்தின் நோக்கமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாவலப்பிட்டியில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் வைபவத்தில் உரையாற்றும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது, ஆகஸ்ட் 17ல் ஐ.தே.க தலைமையிலான தேசிய அரசு அமையும். கடந்த ஜனவரி 8ஆம் திகதி நாட்டு மக்களின் தியாகத்துடன் முன்னெடுத்த புரட்சியை பாதுகாத்து செப்டம்பர் முதலாம் திகதி தேசிய அரசாங்கத்தை அமைப்பதே எமது இலட்சியம். முழுப் பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்றும் நல்லாட்சி யுகத்தை உத்தரவாதப்படுத்துவதே எமது இலக்காகும்.
யார்கைகளில் அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். ஊழல், மோசடிகளால் நாட்டை குட்டிசுவராக்கிய மஹிந்த அணியை மீண்டும் தேர்ந்தெடுப்பதா? அல்லது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தி எதிர்கால முன்னேற்றத்துக்கு வாய்ப்பளிப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் இதுவாகும்.
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராகவருவது எனக்குப் பிரச்சினையில்லை. நாம் எந்த வகையிலும் அதற்குத் தடையாக இருக்கப் போவதில்லை. ஆனால் அவரால் நிச்சயமாக இத் தேர்தலில் பிரதமராக வரமுடியாது. காரணம் அவரை வெல்ல வைப்பதற்கு பிரபாகரன் நாட்டில் இல்லையே. நிச்சயமாக மீண்டுமொரு படுதோல்வியை ஆகஸ்ட் 17ல் மஹிந்த சந்திப்பார்.
எனது அரசியல் வாழ்க்கையில் ஒருபோதும் சுகபோகம் அனுபவிக்க முயற்சித்ததே கிடையாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இன்று பூகம்பம் வெடித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருக்கும் சிலர் மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபாலவை கட்டாயப்படுத்தி வருகின்றனர். ஆனால் சுதந்திரக் கட்சியில் உள்ளவர்கள் அதற்குகடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அக்கட்சி எடுக்கப்போகும் முடிவு எத்தகையது என்பதை தான் அறியமாட்டேன். சிலர் மஹிந்தவை மீண்டும் ஆட்சிப்பீடமேற்றி தமது செயற்பாடுகளை விட்ட இடத்திலிருந்து தொடர விரும்புகின்றனர். மீண்டும் நாட்டில் ஊழல், மோசடி, வன்முறைகளை முன்னெடுப்பதும், வெள்ளை வான் கலாசாரத்தைப் பயன்படுத்து அராஜக ஆட்சியை நடத்துவதுமே இவர்களின் நோக்கமாக வேண்டும் என்பதை ஆகஸ்ட 17ல் மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
20வது அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொறுப்பை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். அதன் பிரகாரம் சமர்ப்பிக்கப்பட்டது. இரண்டு தினங்கள் விவாதம் இடம்பெற்றது. அத்தோடு அவரது பொறுப்பு முடிந்துவிட்டது. அதனையடுத்து வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதி என்னுடன் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்தியதன் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply