அதிகாரம், பணபலமுள்ள போதே தோல்வியடைந்த மஹிந்த இனி வெல்லவே முடியாது ஜே. வி. பி. இருக்கும்வரை தோல்வியே சந்திப்பார்
இலங்கை அரசியலில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்துவதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. அரச வளங்கள், பெருந்தொகையான பணம், இராணுவத்தினரைக் கையில் வைத்துக்கொண்டு நடத்திய தேர்தலில் தோல்விகண்ட அவரால், மீண்டுமொரு தேர்தலில் வெற்றிபெற முடியாது என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
கடுவலை தேர்தல் தொகுதியில் நடைபெற்ற ஜே.வி.பியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் இழைத்த தவறுகளைக் கொண்டு பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு கற்றுக்கொண்ட பாடங்களுக்கு அமைய நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்லுவதற்கு ஜே.வி.பி தலைமைத்துவம் வழங்கும்.
சகல வளங்களையும் வைத்துக்கொண்டு தேர்தலில் வெற்றிகொள்ள முடியாத மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நாட்டின் தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொள்வார் என மக்கள் நினைக்கக் கூடாது. மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நாட்டின் தலைமையை கைப்பற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்பதை ஜே.வி.பி உறுதிப்படுத்துகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என நாம் கோரவில்லை. தானே பதவியிலிருந்து வெளியேறும் திகதிக்கான நாளை மஹிந்த குறித்துக்கொண்டார். அவசரமாக நடத்தப்பட்ட இத்தேர்தலுக்கு பெரும் பணம் செலவிடப்பட்டது.
அதேநேரம், ஊழல் மோசடிகளுக்கு எதிராக நடத்தப்படும் விசாரணைகளைத் தடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே மஹிந்த மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என அவரும், அவரைச் சார்ந்த குழுவும் மும்முரமாக செயற்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆவிக்கோ அல்லது அவரை தாங்கித் திரியும் குழுவினருக்கோ மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஜே.வி.பி ஒருபோதும் இடமளிக்காது என்றார்.
இதேவேளை, குறுகிய கால அரசாங்கத்தை அமைத்தவர்கள் தேர்தலைக் காண்பித்து நடந்துகொண்ட முறையைப் பார்க்கும் போது நீண்டகாலத்துக்கு ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்ற சந்தேகம் தோன்றியுள்ளது. குறுகிய காலத்தில் பெரிய மோசடி இடம்பெற்றுள்ளது.
இவ்வாறான நிலையில் நாட்டின் எதிர்கால சந்ததிக்கு சிறந்ததொரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்கக் கூடிய அரசியல் சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கு ஜே.வி.பி தலைமைத்துவம் அளித்து செயற்படும் என்றும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply