“ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் மஹிந்த போட்டியிடுவார்”

இலங்கையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்று அந்தக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுஷில் பிரேம ஜெயந்த் அறிவித்திருக்கிறார். அதேசமயம் இந்த அறிவிப்பு குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவின் கருத்துக்கள் கிடைக்கவில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு மைத்ரியும் ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த இலங்கை ஜனாதிபதித்தேர்தலில் மஹிந்தவை எதிர்த்து போட்டியிட்டு அவரைத் தோற்கடித்து இலங்கை ஜனாதிபதியானவர் மைத்ரிபால சிறிசேன.

தற்போது மஹிந்தவை தனது கட்சியின் சார்பில் போட்டியிட மைத்ரி எப்படி ஒப்புக்கொண்டது ஏன் என்கிற கேள்விக்கு பதிலளித்த விமல் வீரவன்ச, மஹிந்தவுக்கும் மைத்ரிபால சிறிசேனவுக்க்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் தனிப்பட்டவை என்றும், அவர்கள் இருவரும் தற்போது ஒன்றிணைந்திருப்பது கட்சியின் நலனுக்காகவே என்றும் விளக்கமளித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உடைந்துவிடாமல் காப்பதற்காகவே மஹிந்தவும் மைத்ரியும் ஒன்றிணைய இந்த “வரலாற்றுச் சிறப்பு மிக்க” ஒப்பந்தத்தை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்த விமல் வீரவன்ச, ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இலங்கையில் மைத்ரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து ஆட்சியமைப்பார்கள் என்றும், ஐக்கிய தேசிய கட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் கூறினார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு உறுதியாக வெற்றி பெறுவார் என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன கூட்டமைப்பில் மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்க முன்வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவு வழங்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டடில் பேசியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச ஜி.எல்.பீரிஸ் டலஸ் அழகபெருப பந்துல குணவர்தன ஆகியோரும் பங்குற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply