எவரும் எனக்கு அடிக்கவுமில்லை; நான் யாரிடமும் அடிவாங்கவுமில்லை : சுசில் பிரேம ஜயந்த்

வேட்பு மனு ஏற்கப்படும் இறுதி தினத்திற்கு முதல் நாள் எவரும் எனக்கு அடிக்கவுமில்லை அடிவாங்கும் வகையில் நான் செயற்படவுமில்லை. பேஸ்புக்களிலும் இணைய தளங்களிலும் காணப்படுவது அப்பட்டமான பொய் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த் நேற்றுத் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டுக்குத் தலைமை தாங்கி உரையாற்றிய அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஐ.ம.சு.முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிக்கும் பணி தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இதில் சகல தரப்பினரதும் அபிப்பிராயங்களை உள்ளடக்கவே நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன்படி முழுமையான தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்னும் ஒரு வாரத்தில் உத்தியோக பூர்வமாக வெளியிடுவோம்.

“நாம் நாட்டுக்கு உயிர் கொடுப்போம்” என்று கொண்டுள்ள தொனிப் பொருளைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, குடும்பத்திற்கு உயிர் கொடுக்கப்படுகிறது என விமர்சித்துள்ளார். எமக்கு அது பிரச்சினை இல்லை. உயிருள்ளவர்களால் தான் நாட்டுக்கு உயிர் கொடுக்கலாம். அந்த வகையில் பிரதமர் உயிரற்றவர் என்பதை எல்லா வகையிலும் வெளிப்படுத்தியுள்ளார். அதனால், தான் நாம் உயிருள்ள மனிதரைப் பிரதமராக்கப் போகின்றோம் என்றார்.

இச் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு முன்னாள் எம்.பி. சுசில் பிரேமஜயந்த் பதிலளிக்கையில், தேசிய அரசாங்கம் குறித்து நாம் பேசவில்லை. ஐ.தே.க.வினர் தான் தேசிய அரசாங்கம் குறித்து பேசி வருகின்றனர். அவர்களால் தனித்து நின்று ஆட்சியமைக்க கூடிய பெரும்பான்மையை பெற முடியாது என்பதை அவர்கள் முன்கூட்டியே அறிந்து கொண்டிருக்கின்றனர். அதனால் தான் அவர்கள் தேசிய அரசாங்கம் குறித்து பேசி வருகின்றனர்.

ஆனால் ஒகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறும் தேர்தலில் நாம் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைப்போம் அதற்கான நம்பிக்கை எம்மிடமுள்ளது. எமக்குத் தேசிய அரசாங்கம் தேவையற்றது. 2010ல் பெற்ற வெற்றியை நாம் பெறுவோம் என்றும் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரச சார்பற்ற நிறுவனமொன்று அண்மையில் நுகேகொடவில் கூட்ட மொன்றை நடாத்தியது. அக்கூட்டத்தில் உரையாற்றிய ஒருவர், சுசில் பிரேம ஜயந்தவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேட்பு மனு தாக்கல் செய்யும் இறுதி தினத்திற்கு முதல் நாள் தாக்கியதாகவும் அதனா லேயே அவர் ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டதாகவும், இத் தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் நடாத்தவென சுசிலுக்கு பிள்ளைகள் கிடையாதா எனக் கேள்வி எழுப்பினார்.

இணைய தளங்களிலும், பேஸ்புக் களிலும் உள்ள அப்பட்டமானபொய் செய்தியை ஒரு சொற்பொழிவில் பிரதான கருப்பொருளாகக் கொண்டு பேசியதையிட்டு நான் பெரிதும் கவலை அடைகின்றேன்.

எனக்கு எவரும் அடிக்கவுமில்லை அப்படி அடிக்க வேண்டிய தேவையும் கிடையாது. அவ்வாறு செயற்படுபவன் நானல்ல. நான் நள்ளிரவுக்கு பின்பு ஆஸ்பத்திரிக்கு சென்று மறுநாள் காலையில் வந்து விட்டேன். வேட்பு மனுவையும் சமர்ப்பித்தேன். அதனால் பொய் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு உரையாற்றாதீர்கள் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன் என்றும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply