தேர்தல் முறைகேடுகள்: 51 சம்பவங்கள் பதிவு; 69 பேர் கைது

தேர்தல் சட்ட விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருக்கும் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் இதுவிடயத்தில் கட்சி வேறுபாடின்று கடுமையாக செயற்படுமாறும் பொலிஸாருக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் நேற்று 20ம் திகதி காலைவரை தேர்தல் முறைகேடுகள் தொடர்பான 51 சம்பவங்கள் பொலிஸில் பதிவா கியிருப்பதாகவும் இதனடிப்படையில் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 69 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேக்கர தெரிவித்தார்.

இதில் பிரதானமானது எஹலியகொட பிரதேசத்தில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த ஏழுபேர் கைது செய்யப்பட்டிருப்பதோடு 2400 சுவரொட்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை இமதுவ பகுதியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது ஒலிபெருக்கிகளை மைதானத்துக்கு வெளியே பொறுத்தப்பட்டிருந்த நிலையில் அவற்றை பொலிஸார் கழற்றி அகற்றியுள்ளனர்.

பண்டாரகமையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பொலிஸ் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும், மாகாண சபை உறுப்பினருமான நிமல் சந்திர ரத்ன ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்தமையால் அவரை கைது செய்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஆற்றிய உரைக்கு எதிர்ப் புத் தெரிவித்தே இந்த ஊர்வலம் நடத்தப்பட்டதாகவும் இந்த ஊர்வலத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரம நாயக்கவும் கலந்து கொண்டதாகவும் தகவல் கிடைத் திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த ஊர்வலத்தின் போது ஜனாதிபதியின் விசேட உரைக்கு கண்டனம் தெரிவித்து கட்அவுட்கள், சுலோக அட்டைகளையும் பயன் படுத்தியதாகவும் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர். இந்த ஊர்வலத்தை நடத்த வேண்டாமென பலதடவை பொலிஸார் எச்சரித்த போது அதனையும் மீறி ஊர்வலம் நடத்தப்பட்டதாலேயே அதனை ஏற்பாடு செய்த மாகாண சபை உறுப்பினர் நிமல் சந்திர ரத்னவை கைது செய்ததாக குறிப்பிட்டார்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் நேற்று திங்கட்கிழமை கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.

கட்சி பேதமின்றி தேர்தல் விதி முறைகளை மீறுவோர் யாராக இருப்பினும் அவர்களை உடன் கைது செய்றுமாறு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு இலங் ககோன் உத்தரவிட்டிருக்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply