கென்யாவில் சிறப்பான வரவேற்பு: தந்தைவழி உறவினர்களுடன் விருந்துண்டு, உரையாடி மகிழ்ந்த ஒபாமா

கென்யா வந்தடைந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு நைரோபி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தந்தை பராக் ஹுசேன் ஒபாமா கென்யாவை சேர்ந்தவர். பட்ட மேற்படிப்புக்காக அவர் அமெரிக்கா வந்திருந்தபோது ஒபாமாவின் தாயார் ஆன் துர்காமை காதலித்து திருமணம் செய்தார். ஒபாமா பிறந்த பின்னர் ஆன் துர்காமை விவாகரத்து செய்து விட்டு, மீண்டும் அவர் கென்யாவுக்கு சென்று விட்டார்.

ஒபாமா தனது தாயாருடன் அமெரிக்காவில் தங்கிவிட்டார். அதன்பிறகு கென்யாவில் ஒபாமாவின் தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதற்கு முன்பு 1988–ம் ஆண்டில் தனது 28–வது வயதில் ஒபாமா கென்யாவுக்கு வந்திருந்தார். அப்போது அவரது தந்தை உயிருடன் இல்லை. கார் விபத்தில் மரணம் அடைந்து விட்டார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் அதிபரான பிறகு ஒபாமா முதன் முறையாக தனது தந்தையின் சொந்த நாடான கென்யாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.

கென்யாவில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் கிளையான அல்–ஷபாப் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்துள்ளதால் தற்போது ஒபாமாவின் வருகையையொட்டி கென்யாவின் தலைநகர் நைரோபியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நைரோபியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.

விமான நிலையம் மற்றும் ஒபாமா தங்கும் ஓட்டல் வழியாக செல்லும் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. நைரோபியில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் உயரமான கட்டிடங்களில் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தீவிரவாதத்துக்கு எதிராக ஆதரவு திரட்டும் விதமாக கென்யா மற்றும் எத்தியோப்பியா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 5.10 மணியளவில் கென்யா தலைநகர் நைரோபி வந்தடைந்தார்.

நைரோபி விமான நிலையத்தில் ஒபாமாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கென்யா அதிபர் உஹுரு கென்யாட்டா மற்றும் மந்திரிகள் உயரதிகாரிகள் அவரை வரவேற்று அழைத்து சென்றனர். ஒபாமாவின் சகோதரி ஆவ்மா (தந்தையின் மற்றொரு மனைவிக்கு பிறந்தவர்) ஒபாமாவை ஆரத்தழுவி வரவேற்றார்.

ஒபாமாவின் வருகைக்காக வழிமீது விழிவைத்து மாதக்கணக்கில் காத்திருந்த சாரா பாட்டி, பேரனை உச்சிமுகர்ந்து, முத்தமிட்டு வாழ்த்தினார். தந்தைவழி குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக பேசியபடி விருந்துண்ட ஒபாமா, பின்னர் அவர் தங்குவதற்காக கென்யா அரசு ஏற்பாடு செய்துள்ள நட்சத்திர ஓட்டலுக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

கென்யா அதிபருடன் வர்த்தகம், முதலீடு, தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஒப்பந்தங்களையும் ஏற்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ள ஒபாமா, வரும் ஞாயிற்றுக்கிழமை ஆப்பிரிக்க யூனியன் நாடுகளின் தலைவர்களிடையே உரையாற்றுகிறார்.

அப்போது, ஓரினச்சேர்க்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் ஆப்பிரிக்க நாடுகளின் மனப்போக்குக்கு எதிரான சில கருத்துகளை அவர் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply