தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ரூ.2,156 கோடி நிதி
ஆப்கானிஸ்தான் போர் தொடங்கிய பிறகு, பாகிஸ்தானுக்கு பெரும்பான்மையான நிதியை அமெரிக்கா வழங்கி வருகிறது. கூட்டணி ஆதரவு நிதி என்ற தலைப்பில், பாகிஸ்தான் ஏற்கனவே தீவிரவாத ஒழிப்பு வகைக்காக செலவழித்த தொகையை அமெரிக்கா திரும்ப அளித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கூட்டணி ஆதரவு நிதியாக 337 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,156 கோடி) வழங்குகிறது.
இதை பாகிஸ்தானின் ‘டான்’ செய்தி இணையதளத்திடம் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “நாடு முழுவதும் தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்கிற பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்போம் என்று நாங்கள் அளித்த வாக்குறுதிக்கு இணங்க கூட்டணி ஆதரவு நிதி வழங்கப்படுகிறது. எல்லா தீவிரவாதிகளையும் எதிர்த்து போரிடுவதில் பாகிஸ்தானின் உறுதியையும், பாகிஸ்தானை மீண்டும் தங்கள் சொர்க்கபுரியாக தீவிரவாதிகள் மாற்றிக்கொள்ள முடியாத நிலையை உறுதி செய்திருப்பதையும் நாங்கள் வரவேற்கிறோம்” என்றார்.
பாகிஸ்தானுக்கு 337 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்குவது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்திடம் ஜனாதிபதி ஒபாமா தெரிவித்து விட்டார். இதற்காக 15 நாள் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் காலக்கட்டம் இந்த வாரத்துடன் முடிந்து விடுவதால், அடுத்த சில நாட்களில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா இந்த நிதியை விடுவித்து விடும் என வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், கூட்டணி ஆதரவு நிதி என்பது ராணுவத்துக்கான உதவி அல்ல என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர்.
இது பற்றி அந்த அதிகாரிகள் குறிப்பிடுகையில், “ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையையொட்டிய பகுதிகளில் தீவிரவாத ஒழிப்புக்காக பாகிஸ்தான் செலவிட்ட தொகையைத்தான் அமெரிக்கா அளிக்கிறது” என கூறினர்.
அமெரிக்காவை பொறுத்தமட்டில் அடுத்த நிதி ஆண்டு பட்ஜெட்டிலும், பாகிஸ்தான் அதிகபட்ச நிதி உதவி பெறுகிற வெளிநாடாக அமைந்துள்ளது. அடுத்த நிதி ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் 804 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5,145 கோடி) நிதி உதவியை பெற உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply