ஒற்றையாட்சி முறைமையில் அதிகாரத்தை பகிரத்தயார்
தேசியப் பிரச்சினை தீர்வுக்காக அதிகாரத்தை பகிர்வதில் எமக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. எனினும் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரத்தை பகிர்வதே அரசாங்கத்தின் திட்டமாகும். அரசின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமுமில்லை. புதிய பாராளுமன்றத்தினூடாக இதற்கான விசேட பொறிமுறைகளை நாம் மேற்கொள்வோம் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் தேசிய பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரத்தை பகிரும் பொறிமுறையை நாம் ஆரம்பிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்று முன் தினம் யாழ்ப்பாணத்தில் வெளிட்டதுடன் அதில் சமஷ்டி முறைமை தீர்வு வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞானபம் தொடர்பில் வினவிய போது கேசரிக்கு பதலளிக்கையிலேயே ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஒன்றுப்பட்ட இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடங்களான வடக்கு கிழக்கிற்கு சமஷ்டி கொள்கையின் பிரகாரம் அதி உச்ச அதிகாரப்பகிர்வே இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வாக அமையும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தினூடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் நிதி அமைச்சரும் கொழும்பு மாவட்ட ஐ.தே.க வேட்பாளருமான ரவி கருணாநாயக்க கேசரிக்கு கருத்து தெரிவிக்கையில்,
தேசிய பிரச்சினைக்காக அதிகாரத்தை பகிர்வதனால் எமக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. நாட்டின் தேசிய பிரச்சினை தீர்க்கப்பட்டு இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். இதனூடாக நாட்டை வளர்ச்சிக்குட்படுத்த முடியும். ஆகவே ஒற்றையாட்சிக்குள் தேசியப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான குறிக்கோளாகும்.
இருந்தபோதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுப்பட்ட இலங்கைக்குள் சமஷ்டி தீர்வையே வேண்டி நிற்கின்றது. எனவே கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் தொடர்பில் எம்மால் தட்டிக்கழித்து விட்டு செயற்பட முடியாது. எனினும் எவருடைய நிலைப்பாடுகள் எதுவாக இருப்பினும் அது எமக்கு பிரச்சினை இல்லை.
ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தை பகிர்வதே தேசிய பிரச்சினைக்கு உரிய தீர்வாகும். குறித்த தீர்வு அனைத்து இனத்தவர்களுக்கும் சாதகமானதாக அமையும். எனவே அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யோசனையை மாத்திரம் எம்மால் செவிமடுக்க முடியாது.
அனைத்து தரப்பினரினும் யோசனைகளை செவிமடுத்து ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தை பகிர்வதே அரசின் நோக்கமாகும். இதற்காக தேசியப் பிரச்சினை தீர்வு விடயத்தில் விசேட பொறிமுறை ஒன்றை புதிய பாராளுமன்றத்தினூடாக ஆரம்பிக்கவுள்ளோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply