கலாம் இறுதி அஞ்சலியையொட்டி இன்று தமிழகத்தில் பொது விடுமுறை

டாக்டர். அப்துல் கலாம் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுவதை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் பொதுத் துறைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் இன்றைய தினம், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் இன்று கலாமின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை நகைக் கடைகள் மூடப்படும் என தமிழ்நாடு தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

திரையரங்குகளில் இன்று பகல் காட்சிகள் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கலாம் இறுதிச் சடங்கையொட்டி இன்று கடைகள் அடைக்கப்படும் என தமிழ்நாடு வணிகசங்கப் பேரவை அறிவித்துள்ளது.

இதே போல் இன்று  காலை 6 மணியிலிருந்து கலாமின் உடல் அடக்கம் நடைபெறும் வரை கடைகள் அடைக்கப்படும் என  தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply