புலிகளின் புலனாய்வு பிரிவின் முக்கியஸ்தரான தயா மாஸ்டர் கொழும்பில் கைது.

புலிகளின் புலனாய்வு பிரிவின் முக்கியஸ்தரான தயா மாஸ்டர் என்பவரை கொழும்பில் புலனாய்வுப் பொலிசின் விசேட பிரிவொன்று கைது செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இராணுவ சீருடையில், இராணுவ வாகன இலக்கத் தகட்டுடன் கூடிய ட்ரக் வண்டி ஒன்றின் மூலம் கட்டுநாயக்க விமானப் படை முகாமுக்குள் நுழைந்து, போர் விமானங்களை அழிக்கும் திட்டத்திற்கு பொறுப்பாக இருந்த புலிகளின் புலனாய்வு பிரிவின் முக்கியஸ்தரான தயா மாஸ்டர் என்பவரை ஆயுதம் மற்றும் வெடிப் பொருட்களைக் கண்டுபிடிக்கும் விசேட புலனாய்வுக் குழுவொன்று கொழும்பில் கைது செய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் இருந்தே இவர் இந்த தாக்குதல் தொடர்பில் நெறிப்படுத்தப்பட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கான வாகனம் உள்ளிட்ட தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய லண்டனில் இருந்து மில்லியன் கணக்கில் பணம் கிடைத்துள்ளது. புலிகளின் இந்த புலனாய்வுப் பிரிவு முக்கியஸ்தரான தயா மாஸ்டர் தன்னை சிங்களவரென இனங்காட்டிக் கொண்டு, வத்தளையில் உள்ள வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளார். சிங்களப் பெயரில் தயாரிக்கப்பட்டிருந்த மூன்று தேசிய அடையாள அட்டைகளையும் அவரிடமிருந்து தாம் மீட்டுள்ளதாக காவற்துறையின் விசேட புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளனர்.

கருணா புலிகள் அமைப்பில் இருந்து விலகிய பின்னர், கருணா அணியின் 8 பேர் ஹோகந்தர பிரதேசத்தில் உள்ள ஒரு வீடொன்றில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர். தயா மாஸ்டர் என்ற இந்த நபரே அவர்களை சுட்டுக் கொன்றார் என்பதும் தெரிய வந்துள்ளதாக விசேட புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளனர்.

சந்தேக நபர் கொழும்பில் உள்ள பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்ததுடன் பாதாள உலக குழுவினருக்கு தயா மாஸ்டர் ஆயுதங்களை வழங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனடிப்படையில் மோதர கிம்புலாஹெல குணா என்ற பாதாள உலக குழு உறுப்பினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்குளியில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் கொழும்பு துறைமுகத்தை தாக்குவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் காவற்துறையின் விசேட புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply