இத்தாலிக்கு கள்ளத்தனமாக குடியேற 400 அகதிகளுடன் சென்ற படகு லிபியா அருகே கவிழ்ந்தது: 200 பேர் கதி என்ன?

italyஆப்பிரிக்கா, பாகிஸ்தான், சிரியா, மொராக்கோ மற்றும் வங்காளதேசத்தில் இருந்து இத்தாலி நாட்டுக்கு கள்ளத்தனமாக குடியேறச் சென்ற அகதிகளின் படகு லிபியா நாட்டின் கடல் எல்லையில் கவிழ்ந்ததால் கடலில் மூழ்கிய சுமார் 200 பேரின் நிலைமை என்ன ஆனது? என்பது தொடர்பாக கவலை மேலோங்கியுள்ளது.

போர் பதற்றம், வறுமை, வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகளை சேர்ந்த மக்கள், ஐரோப்பிய நாடுகளை சொர்க்கப்புரியாக கருதுகின்றனர். எப்படியாவது, ஐரோப்பிய நாடுகளில் குடியேறி விட்டால் வசதியாக வாழலாம் என்ற எண்ணத்தில் பலர் ஏஜெண்ட்களின் மூலமாக கள்ளத்தனமாக படகுகளில் சென்று ஐரோப்பிய நாடுகளுக்குள் ஊடுருவ முயற்சித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இத்தாலி இருந்து வருகின்றது.

அவ்வகையில், ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், சிரியா, மொராக்கோ மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த சுமார் 400 பேர் லிபியாவின் கடற்கரை நகரமான ஜுவாராவில் இருந்து ஒரு படகில் இத்தாலி நாட்டை நோக்கி புறப்பட்டனர்.

அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான மக்களை ஏற்றிச்சென்ற அந்தப் படகு நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்தது. வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பாதுகாப்பில்லாத அந்த படகில் சென்ற அனைவரும் கடல் நீருக்குள் மூழ்கி, உயிருக்குப் போராடினர்.

இதைக் கண்ட லிபியா நாட்டு கடலோரக் காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று 201 பேரை மட்டும் உயிருடன் காப்பாற்றி, கரைக்கு அழைத்து வந்தனர். கடலில் மூழ்கிய மேலும் சுமார் 200 பேரின் என்ன ஆனது? என்று தெரியவில்லை என லிபியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ள போதிலும், மிகக் குறைவான மீட்பு மற்றும் தேடுதல் உபகரணங்களை கொண்டுள்ள லிபியாவின் கடலோரக் காவல் படையினர் இந்த தேடுதல் வேட்டையில் வெற்றி பெறுவார்கள் என்று உறுதியாக கூறமுடியாத நிலையில், கடலில் மூழ்கிய சுமார் 200 பேரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என அஞ்சப்படுகிறது.

கடந்த 8 மாதங்களில் மட்டும் உரிய ஆவணங்களின்றி ஐரோப்பிய நாடுகளில் கள்ளத்தனமாக குடியேறும் ஆசையில். படகுகளில் அகதிகளாக வந்த சுமார் 2,300 பேர் கடலுக்கு பலியாகியுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply