தேசிய அரசில் இணைகிறார் சமல் ராஜபக்ச
முன்னாள் சபாநாயகரும், ஐ.ம.சு.மு சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டவருமான சமல் ராஜபக்ச தேசிய அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளார். தேசிய அரசாங்கத்தை அமைப்பது என்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கு இணங்கி தேசிய அரசாங்கத்தில் தான் இணைந்துகொள்வதாக அவர் கூறினார்.
அரசாங்கத்தின் செயற்பாடு களை எதுவித தடையும் இன்றி முன்னெடுத்துச் செல்வதற்கு பலம் சேர்க்கும் வகையில் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் திட்டத்துக்கு பலம் சேர்ப்பதற்கு தான் விரும்புவதாகவும், அரசியல் என்பது ஒரு சித்தாந்தமாக இருந்தாலும் கட்சித் தலைவரின் முடிவுக்கு மதிப்பளித்து செயற்படவிருப்பதாகவும் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வீர்களா என எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், இது தொடர்பில் இன்னமும் எதுவித முடிவும் எடுக்கவில்லையெனக் கூறினார். ராஜபக்ச குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரப்போவதாகக் கூறியிருப்பது தொடர்பில் கேட்டபோது,
“கட்சியில் தொடர்ந்தும் இருப்பதாயின் கட்சித் தலைமையின் தீர்மானத்துக்கு அமைய நாம் நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையெனில் நாம் கட்சியைவிட்டு வெளியேறவேண்டும். இந்த இரண்டு தெரிவுகளுமே எமக்கு உள்ளது” என அவர் கூறினார்.
ஐ.ம.சு.முவில் சில உறுப்பினர்கள் ஆளும் தரப்பிலும், சிலர் எதிர்க்கட்சியிலும் அமரப்போவதாகக் கூறியுள்ளனர். இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவருடைய மகன் நாமல் ராஜபக்ச ஆகியோர் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமரவிருப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply