உள்ளக விசாரணை குறித்து அமெரிக்காவின் நகர்வு இலங்கைக்கு ஆபத்து :கலாநிதி தயான் ஜயதில
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து உள்ளக விசாரணையொன்றை மேற்கொள்வதற்கு ஆதரவு தெரிவிப்பதாக அமெரிக்கா விடுத்துள்ள அறிவிப்பு இலங்கைக்குச் சாதகமானதல்ல” என்று முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதில எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தால் நடத்திமுடிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணை அறிக்கையை முழுமைப்படுத்தும் நோக்கில் உள்ளக விசாரணையை நடத்துவதற்கு அமெரிக்கா அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணையொன்றை வலியுறுத்தி வந்த அமெரிக்கா, தற்போது தமது நிலைப்பாட்டை மாற்றி உள்ளக விசாரணைக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. அண்மையில், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் தேஷாய் இதனைக் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து வினவியபோதே கலாநிதி தயான் ஜயதில மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,
உள்ளக விசாரணைப் பொறிமுறையூடாக பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். ஏனெனில், உள்ளகப் பொறிமுறையை உருவாக்கும் விடயத்தில் இலங்கையின் அனைத்துத் தரப்பினரையும் உள்வாங்கவேண்டும் என இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் குறிப்பிட்டுள்ளார். வேறு தரப்பினர் எனக் குறிப்பிடும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடமாகாண சபை என்பன அதில் உள்ளடங்கும்.
முழுமையான சர்வதேச விசாரணையொன்றை நடத்தமுடியாவிட்டால், நடைபெறவுள்ள உள்ளக விசாரணை சர்வதேச கண்காணிப்பு அவசியம். உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு சர்வதேச பங்காளர்களும் இருக்கவேண்டும் என சுமந்திரன் எம்.பியும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த உள்ளக விசாரணைப் பொறிமுறைக்குள் சர்வதேசத்தின் பங்கும் உள்வாங்கப்படவுள்ளது. அப்படியானால், இது உள்ளக விசாரணையாக அமையாது. இது உள்ளக விசாரணை என்ற முகமூடி அணிந்து மேற்கொள்ளும் விசாரணையாகும். இது உள்ளக விசாரணையைவிட மோசமானதாகும்.
அமெரிக்கா தலையிட்ட அனைத்து உலக நாடுகளிலும் நல்லிணக்கம் வீழ்ந்துபோயுள்ளது. இல்லாத சிவில் யுத்தம் அந்த நாடுகளில் உருவாகியுள்ளன. நல்லிணக்கம் தொடர்பில் ஜெனிவாவில் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள திட்டமானது ஆபத்தானது. இலங்கை அரசு அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
அரசைபோல ஜனாதிபதியும் இந்த விடயத்தில் அவதானமாக இருந்து அதற்கு இடமளிக்கக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply