பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள இரு கிறிஸ்தவ தேவாலயங்களின் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மூன்று தீவிரவாதிகளை பாக். ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தானின் லாகூர் நகரின் யோஹானாபாத் பகுதியில் உள்ள இரு கிறிஸ்தவ தேவாலயங்களின் மீது கடந்த மார்ச் மாதம் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கலில் 17 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத இயக்கத்தில் இருந்து பிரிந்துச் சென்ற ஜமாத்துல் அஹ்ரார் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்று கொண்டது.
இதையடுத்து, அந்த இயக்கத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளிகளான ஹஸன் பஞ்சாபி, ஷா கானூன், முஹம்மது இம்ரான் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கும்பலுக்கு சொந்தமான ஆயுத கிடங்குக்கு அவர்களை அழைத்துச் சென்று அங்கு பதுக்கி வைத்திருக்கும் வெடிப்பொருட்களை கைப்பற்றும் முயற்சியில் மேற்கண்ட மூன்று குற்றவாளிகளையும் வாகா எல்லையோரம் உள்ள பாட்பூர் ஹவுஸ் பகுதிக்கு நேற்று பாகிஸ்தான் உளவுப்பிரிவு போலீசார் அழைத்துச் சென்றனர்.
போலீசார் அந்த இடத்தை நெருங்கியபோது, ஜமாத்துல் அஹ்ரார் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த சிலர் ஆயுதங்களுடன் அவர்களை சுற்றிவளைத்து, தங்களது கூட்டாளிகளை காப்பாற்றி, விடுவித்து அழைத்துச் செல்லும் நோக்கத்தில் துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர்.
இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொண்டு போலீசாருடன் வந்திருந்த குற்றவாளிகள் மூவரும் தப்பியோட ஆரம்பித்தனர். அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் யோஹானாபாத் பகுதியில் உள்ள இரு கிறிஸ்தவ தேவாலயங்களின் மீது தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளிகளான ஹஸன் பஞ்சாபி, ஷா கானூன், முஹம்மது இம்ரான் ஆகியோர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply